இரண்டு குழந்தைகளுடன் குகைக்குள் வசித்து வந்த ரஷ்ய பெண்.. ரோந்து பணியின்போது மீட்ட போலீசார்!
Russian Woman, 2 Daughters Living in Cave | கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா, ஜூலை 13 : கர்நாடகாவில் (Karnataka) உள்ள ஒரு குகையில் இருந்த ரஷ்ய பெண் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். ரஷ்யாவில் இருந்து பிசினஸ் விசா (Business Visa) மூலம் இந்தியா வந்த அந்த பெண், இங்கேயே தனது குழந்தைகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குகையின் வெளியே துணிகள் தெரிந்ததை வைத்து அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த ரஷ்ய பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. அங்கிருந்து அவர்களை மீட்ட போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பெண் குழந்தைகளுடன் குகைக்குள் வசித்து வந்த ரஷ்ய பெண்
நினா குடினா என்ற 40 வயது ரஷ்ய பெண் ஒருவர் பிசினஸ் விசா மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த அவர் இந்து மதம் மீது அதிக ஈர்ப்பு கொண்டதால் கோவாவுக்கு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவுக்கு வந்த அவர் அவரது இரண்டு மகள்களான பிரேயா (வயது 6) மற்றும் எமா (வயது 4) ஆகியோருடன் உத்தர கன்னடாவில் இருக்கும் குகை ஒன்றில் தங்கியுள்ளார். அவர்கள் அந்த குகைக்குள் வீடு போன்ற செட் அப் செய்து வசித்துள்ளனர். சுமார் இரண்டு வாரங்கள் அந்த பெண் தனது குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.
ரோந்து பணியின் போது கண்டுபிடித்த போலீசார்
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் ரோந்து செல்லும் போலீசார், ஜூலை 11, 2025 அன்று ரோந்து சென்றுள்ளனர். அப்போது குகைக்கு வெளியே சேலை உள்ளிட்ட உடைகள் வெளியே காயவைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை கண்டு சந்தேகமடைந்த போலீசார் குகையின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது, குகைக்குள் நினா குடினா தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்ததை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்து மதத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்ட அந்த பெண், அந்த குகையில் துர்கை சிலயை வைத்து வழிபட்டு வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.




இதையும் படிங்க : மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப கேட்ட விவசாயி.. அடித்தே கொன்ற தாளாளர்!
செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி
ரஷ்ய பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் குகையில் இருந்து மீட்ட உத்தர கன்னடா எஸ்பி கூறியதாவது, எங்கள் பேட்ரோல் குழுவினர் குகைக்கு வெளியே சேலை உள்ளிட்ட துணிகள் காய்ந்துக்கொண்டு இருப்பதை கண்டனர். அவர்கள் அங்கு சென்றபோது நினா குடினா மற்றும் அவரது இரண்டு மகள்களை பார்த்துள்ளனர். அவர்கள் அத்தனை நாட்கள் அங்கு எப்படி வசித்தார்கள் என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. அந்த பெண்ணின் விசா 2017 ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்டது. அவர் இங்கு எத்தனை நாட்களாக தங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.