Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Droupadi Murmu: சபரிமலையில் பள்ளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றபோது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வானிலை காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளம் பலவீனமாக இருந்ததால், ஹெலிகாப்டரின் எடை தாங்க முடியாமல் ஒரு பகுதி புதைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Droupadi Murmu: சபரிமலையில் பள்ளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர்!
Draupati Murmu
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2025 13:25 PM IST

கேரளா, அக்டோபர் 22: சபரிமலைக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக கேரளாவிற்கு சென்றுள்ளார். நேற்று (அக்டோபர் 21) திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்ற அவர் இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லவிருந்தார். இதனால் கடும் கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனை செய்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். முதலில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் நிலக்கல் பகுதியில் தரையிறங்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மோசமான வானிலை நிலவியதால் கேரளாவின் பிரமதம் மைதானத்தில் இறங்க திட்டமிடப்பட்டது.

அதற்கேற்ப முன்னேற்பாடுகள் பணிகளும் நடந்தது. ஹெலிகாப்டரின் எடையை தாங்கக்கூடிய அளவில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது அதன் ஒரு பகுதி கான்கிரீட் தளத்திற்குள் இறங்கியது. இதனால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. திரௌபதி முர்மு சாலை வழியாக சபரிமலையின் அடிவாரப் பகுதியான பம்பைக்குச் சென்றார்.

Also Read: இந்த 3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்; ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு!

பள்ளத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்

முன்னதாக ராஜீவ் காந்தி உட்புற விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் உண்டான பள்ளத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டரை காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் தள்ளிக் கொண்டிருந்த காட்சிகள் வெளியானது. வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இறங்குமிடம் கடைசி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டதால் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி முழுமையாக நிலைபெறவில்லை, எனவே, ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது அதன் எடையைத் தாங்க முடியாமல் சக்கரங்கள் தரையைத் தொடும் இடங்களில் பள்ளங்கள் உருவானதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். 1970 ஆம் ஆண்டுகளில் சபரிமலைக்குச் சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி. கிரிக்குப் பிறகு, இரண்டாவது குடியரசுத் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடக்கத்தக்க விஷயமாகும்.

Also Read: நீதியை நிலைநாட்டிய ஆபரேஷன் சிந்தூர்.. நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..

சபரிமலை தரிசனத்திற்குப் பிறகு, இன்று மாலை திருவனந்தபுரம் திரும்பும் குடியரசுத் தலைவர், நாளை (அக்டோபர் 23) வியாழக்கிழமை, ராஜ்பவனில் முன்னாள் ஆளுநர் கே.ஆர். நாராயணனின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர், அவர் வர்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள புனித தாமஸ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி விழாவின் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.