வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி!
Bengaluru Dowry Harassment : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்ப்பமாக இருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பெண்ணின் கணவர் கைதான நிலையில், அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு, ஆகஸ்ட் 29 : பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் (Bengaluru Dowry Harassment Case) 27 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை தலைதூக்கி இருக்கிறது. வரதட்சணை கொடுமையால் பெண் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சிலர் இந்த பிரச்னையை வெளியே தெரிவித்தும், பலரும் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். வரதட்சணையை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதன் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (27).
இந்த தம்பதிக்கு ஒன்றயை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா கர்ப்பமாக இருந்தார். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஷில்பாவும், பிரவீனும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். திருமணமாக ஓராண்டில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிரவீன் உணவக தொழிலை தொடங்கினார். இதற்கிடையில் தான், ஷில்பா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சுட்டகுண்டேபாளையா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




புகரின்பேரில் பிரவீனை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமையா தனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பெற்றோர் புகாரில் கூறியுள்ளனர். மேலும், திருமணத்தின்போது, பிரவீன் பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து வரதட்சணையாக ரூ.15 லட்சம் ரொக்கம், 150 கிராம் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கேட்டதாக புகாரில் கூறியுள்ளனர்.
Also Read : சத்தீஸ்கரில் கடும் வெள்ளம்.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. சொந்த ஊருக்கு சென்றபோது சோகம்!
கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
இதனையும் பெண்ணின் பெற்றோர் செய்தனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு கூடுதல் பணத்தை கேட்டு, ஷில்பாவை கொடுமையாக செய்து வந்ததாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரவீன் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தியதாக புகாரில் கூறியுள்ளனர். ஷில்பாவின் குடும்பத்தினர், அவரது தோல் நிறம் காரணமாக அவர் கேலி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
“நீ கருப்பாக இருக்கிறாய், என் மகனுக்குப் பொருத்தமானவள் இல்லை. அவனை விட்டுவிடு, அவனுக்கு ஒரு நல்ல மணப்பெண்ணைக் கண்டுபிடிப்போம்” என்று மாமியார் கூறியதாக காவல்துறை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு, தொழிலுக்கு உதவுவதற்காக பிரவினின் குடும்பத்தினர் ரூ.5 லட்சம் கேட்டதாகவும், இறுதியில் ஷில்பாவின் குடும்பத்தினர் அந்த தொகையை செலுத்தியதாகவும் தெரிகிறது.
Also Read : நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 12 பேர் பலி.. மும்பையில் அதிர்ச்சி!
இருப்பினும், கூடுதல் பணம் கேட்டு ஷில்பாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் தான், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரவீன் கைதான நிலையில், இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)