PM Modi’s Gujarat Roadshow: குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ.. மலர்தூவி வரவேற்ற கர்னல் சோபியா குடும்பத்தினர்!
Colonel Sophia Qureshi's Family: ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னர் குஜராத்தில் பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். சோபியாவின் தந்தை, சகோதரி மற்றும் தாய் ஆகியோர் பிரதமரின் செயலைப் பாராட்டினர். இந்த நிகழ்வு பெண்களின் சாதனையை பறைசாற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் இந்த ரோடுஷோ 'சிந்தூர் சம்மன் யாத்திரை' என அழைக்கப்பட்டது.

குஜராத், மே 26: ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு (Operation Sindoor) பிறகு குஜராத் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வதோதராவில் நடந்த பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இந்திய இராணுவ கர்னல் சோபியா குரேஷியின் (Colonel Sophia Qureshi) குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களும் பிரதமர் மோடி மீது மலர் தூவி மரியாதை செலுத்துவதையும் காண முடிந்தது. பிரதமர் மோடியின் (PM Modi) ரோடு ஷோவுக்கு சிந்தூர் சம்மன் யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2 நாள் குஜராத் பயணமாக வந்துள்ளார். இதன்போது, பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
பிரதமர் மோடி ரோடு ஷோ:
The family of Sofiya Qureshi joined PM Modi’s roadshow in Vadodara! #pmroadshow #vadodara #sophiaqureshi pic.twitter.com/ezZgE3cNQi
— Preeti Sompura (@sompura_preeti) May 26, 2025
பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு பிறகு, கர்னல் சோபியா குரேஷியின் முழு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக காட்சியளித்தனர். இதுகுறித்து கர்னல் சோபியாவின் தந்தை தாஜ் முகமது குரேஷி கூறுகையில், “ பிரதமர் என்னை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் வரவேற்றார். நானும் அவரை மரியாதையுடன் வரவேற்றேன். என் குடும்பத்தை சேர்ந்த எல்லாரும் ஒன்றாக வரவேற்பது மிகவும் நல்ல விஷயம். அவர், நம் நாட்டின் பிரதமர், எனவே அவரை வரவேற்க வேண்டும். சோபியா எங்கள் மகள் மட்டுமல்ல, இந்தியாவின் மகள். சோபியா செய்ததெல்லாம் மிகவும் நல்ல விஷயம், அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்” என்றார்.
சோபியா குரேஷியின் இரட்டை சகோதரி ஷைனா சன்சாரா இதுகுறித்து கூறுகையில், “நானும் ஒரு பெண், பிரதமர் மோடி பெண்களை எவ்வளவு வளர்த்துள்ளார் என்பதை என்னால் உணர முடிகிறது. சோபியா குரேஷி என் இரட்டை சகோதரி. இது மிகவும் ஊக்கமளிக்கும் விஷயம், இப்போது சோபியா என் சகோதரி மட்டுமல்ல, இப்போது அவர் முழு இந்தியாவின் சகோதரியாகிவிட்டார்” என்றார்.
சோபியா குரேஷியின் தாயார் ஹலிமா பீபி, “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பெண்களும் சகோதரிகளும் மகிழ்ச்சியடைகிறார்கள்.” என்று தெரிவித்தார்.
கர்னல் சோபியா குரேஷி:
2025 மே 8ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த 2 பெண் அதிகாரிகளில் கர்னல் சோபியா குரேஷியும் ஒருவர். எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18 எனப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண்மணியும் இவர்தான். இது இந்தியாவால் இதுவரை ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பயிற்சியாகும்.