மீண்டும் நீட் தேர்வு – மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா? வெளியான விவரங்கள்
NEET UG 2026 Exam : இந்திய அரசின் ஒப்புதலுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, புதிய தேதியில் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி மற்றும் புதிய அட்மிட் கார்டு வெளியீட்டு அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு கடந்த மே 3, 2026 அன்று தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற தேர்வில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் பகிர்ந்த விசாரணை அறிக்கைகள் அடிப்படையில், தற்போதைய தேர்வை தொடர முடியாது என்பது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்வு நடத்தப்படும்
இதையடுத்து, இந்திய அரசின் ஒப்புதலுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, புதிய தேதியில் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி மற்றும் புதிய அட்மிட் கார்டு வெளியீட்டு அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் முழுமையாக வழங்க தேசிய தேர்வு ஒத்துழைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு மாணவர்களின் நலன் மற்றும் தேசிய தேர்வு முறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவே எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. மீண்டும் தேர்வு நடத்தப்படுவது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், தேர்வின் நம்பகத்தன்மையை காப்பது அதைவிட முக்கியம் என்று NTA தெரிவித்துள்ளது.
மே 2026 தேர்வுக்காக ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்த விவரங்களே பயன்படுத்தப்படும். மேலும், மாணவர்கள் தேர்வு மையங்களை மீண்டும் தேர்வு செய்ய தேவையில்லை. புதிய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படாது. ஏற்கனவே செலுத்திய தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.