Monorail : மும்பையில் பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்.. சிக்கி தவித்த பயணிகள்!
Mumbai Mono Rail Malfunction | மும்பையில் மோனோ ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பழுதாகி அந்தரத்தில் நின்றது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மும்பை, செப்டம்பர் 16 : மும்பையில் (Mumbai) மோனோ ரயில் (Mono Train) பழுதாகி அந்தரத்தில் நின்ற நிலையில், பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ரயில் அந்தரத்தில் நின்ற நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரயிலில் பயணம் செய்த பயணிகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோனோ ரயில் சேவையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தரத்தில் நின்ற மோனோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில் – பயணிகள் அவதி
மும்பையில் நேற்று (செப்டம்பர் 15, 2025) காலை 7.16 மணிக்கு அண்டாப்ஹில் பஸ் டிப்போ – ஜிடிபிஎன் பேருந்து நிலையம் இடையே மோனோ ரயில் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய பயணிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : கீழே கிளாஸ் ரூம்.. மேலே கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி.. சிக்கியது எப்படி?




விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட தீயணைப்புத்துறை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதற்காக அவர்கள் மற்றொரு மோனோ ரயிலை வரவழைத்தனர். மற்றொரு மோனோ ரயில் பழுதாகி நின்ற மோனோ ரயிலுக்கு அருகே அடுத்த தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு தண்டவாளங்களுக்கும் இடையே பலகைகள் அமைக்கப்பட்டு பழுதாகி நின்ற ரயிலில் இருந்து பயணிகள் மற்றொரு ரயிலுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க : தொடரும் மர்மம்.. கேரள காங்கிரஸை துரத்தும் தற்கொலைகள்.. பகீர் கிளப்பும் சிபிஎம்!
ரயிலில் இருந்த 17 பயணிகள் பத்திரமாக மீட்பு
பிறகு அவர்கள் அனைவரும் அதற்கு அடுத்து உள்ள ரயில் நிலையத்தில் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பழுதாகி நின்ற அந்த மோனோ ரயிலில் வெறும் 17 பயணிகள் மட்டுமே பயணம் செய்த நிலையில், மீட்பு பணிகள் சற்று விரைவாக நடைபெற்றதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மோனோ ரயில் பழுதாகி நின்ற நிலையில், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆகஸ்ட் 19, 2025 அன்று கனமழை எதிரொலியாக மோனோ ரயில் பழுதாகி நின்ற நிலையில், தற்போது மேலும் ஒரு ரயில் பழுதாகி நின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.