Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

YEAR ENDER 2025: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறிய குடியேற்ற மசோதா!

Immigration And Foreigners Bill: மத்திய அரசு கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் என்னென்ன எதிர்ப்புகளை சந்தித்து சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம் .

YEAR ENDER 2025: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறிய குடியேற்ற மசோதா!
எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியேற்ற மசோதா நிறைவேற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Dec 2025 18:06 PM IST

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் வெளி நாட்டவர்களை கண்காணிக்கும் வகையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவானது வெளிநாட்டினர் இந்தியாவில் தங்குதல், வெளியேற்றம் போன்றவற்றை ஒழுங்கு படுத்துவதுடன், ஏற்கனவே இருந்த பழைய சட்டங்களை நீக்குகிறது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் சட்டவிராத குடியேற்றத்தை தடுப்பதும், கடுமையான தண்டனைகள் விதிப்பதும் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை நவீனப்படுத்துவதுமாகும். இந்த மசோதா 4 பழைய சட்டங்களை ரத்து செய்து ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டினரை கண்காணிக்கும் குடியேற்ற சட்டம்

மேலும், வெளிநாட்டினர் வருகை, அவர்கள் தங்குதல், வெளியேற்றப்படுதல் ஆகியவற்றை இந்த சட்டம் ஒருங்கிணைக்கிறது. இதே போல, சட்டவிரோத குடியேற்றம், போலி ஆவணங்களை பயன்படுத்துதலுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். மேலும், நவீன பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்றவாறு குடியேற்ற விதிகளை இந்த சட்டம் மேம்படுத்துகிறது. கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு எளிய வழிமுறைகளை இந்த சட்டம் வகுத்துள்ளது.

மேலும் படிக்க: YEAR ENDER 2025: அகமதாபாத் விமான விபத்து…உடல் கருகி உயிரிழந்த 241 பேர்…உயிர் பிழைத்த ஒருவர்!

வெளிநாட்டினர் வருகை பதிவு கட்டாயம்

இந்த சட்டத்தின் கீழ் போலியான பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இதே போல, பாஸ்போர்ட் மற்றும் விசா இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனை ஆகிய இடங்களில் வெளிநாட்டினரின் வருகையை பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்

மேலும், வெளிநாட்டினர் அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு இந்த குடியேற்ற சட்டம் வழங்கியது. இந்த மசோதா நிறைவேற்றதுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதற்கான இந்த மசோதாவானது கடந்த மார்ச் மாதம் 27- ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

காலாவதியான 4 சட்டப் பிரிவுகள்

அதன்படி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப்பின் இந்த மசோதா சட்டமாக மாறியது. இதனால், வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939, பாஸ்போர்ட் சட்டம் 1920, குடியேற்ற சட்டம் 2000, வெளிநாட்டினர் சட்டம் 1946 ஆகிய 4 சட்டப் பிரிவுகளும் காலாவதியானது. இவ்வாறாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: YEAR ENDER 2025: வக்ஃபு சட்ட திருத்த மசோதா கடந்த வந்த பாதை!