YEAR ENDER 2025: வெள்ளை நிற கார்…வெடித்து சிதறிய குண்டு…பறிபோன 15 உயிர்கள்!
Delhi Red Fort Car Bomb Blast Incident: டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் குண்டு வெடித்து 15 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக "2025 மீள் பார்வை"யில் சற்று விரிவாக பார்க்கலாம்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி சிக்னலில் வெடி பொருள்கள் நிரப்பப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கவும் முடியாது. ஏனென்றால் மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவர் என்ற போர்வையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும், இதில், 15 அப்பாவி மக்களின் இன்னுயிர் மாய்க்கப்பட்டதுதான் காரணம் ஆகும். இந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர் காஷ்மீர் மாநிலம், புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது நபி ஆவார். இவர், ஹரியானாவில் உள்ள அல்பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருத்துவர் உமர் முகமது நபிக்கும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு முகமை 42 முக்கிய தடையங்களை சேகரித்தது. மேலும், உமர் முகமதுவுடன் பணி புரிந்து வந்த சக மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர், இந்தச் சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. 22 தொழிலாளர்கள் பலி.. அருணாச்சலப்பிரதேசத்தில் ஷாக் சம்பவம்!
மருத்துவமனையில் கைப்பற்றப்பட்ட 360 கிலோ வெடி பொருள்கள்
மேலும், இந்த சம்பவம் உயர் பாதுகாப்பு உடைய மண்டலத்தில் நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர்களாக மூன்று பேர் இருந்தனர். இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக ஹரியானா அல்பலோ மருத்துவமனையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கி, 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
வெள்ளை நிற காரில் வெடித்து சிதறிய குண்டு
இதில், மருத்துவர்களான அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் மேலோங்கியது. அதன்படியே, அன்று இரவு டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளை நிற ஐ- 20 கார் வெடித்து சிதறியது.
மருத்துவர்கள் இணைந்து திட்டமிட்ட சதி
இந்தக் காரின் உரிமையாளர் காஷ்மீரை சேர்ந்த ஆமீர் ரஷீத் அலி என்பதும், காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சேர்ந்த ஆமீர் ஆகியோருடன் சேர்ந்து முகமது நபி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இந்த சுவடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது, மறையாது, அழியாது…
மேலும் படிக்க: பஹல்காம் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை…பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய இந்தியா!



