டெல்லியை முடக்கிய ‘ஜந்தர் மந்தர் 2.0’ போராட்டம்.. சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே உட்பட பலர் கைது!!
Delhi CJP Protest: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அறிவித்த ஜந்தர் மந்தர் 2.0 போராட்டத்தால் டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரபல யூடியூபர் துருவ் ரத்தி, CJP தலைவர் அபிரீத் தீப்கே உட்பட 400-க்கும் மேற்பட்டோர் அதிரடியாகக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியலில் நடைபெற்றதாக கூறப்படும் குளறுபடிகள் மற்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான முறையான விசாரணையையும் வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் ‘ஜந்தர் மந்தர் 2.0’ போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்திற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளபோதிலும், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ஆதரவாளர்களும் டெல்லியை நோக்கி வரத் தொடங்கினர். இதனையடுத்து, தலைநகரில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் பொது அமைதியைக் காக்கவும் மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. சனிக்கிழமை காலை நிலவரப்படி, டெல்லி முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நகரம் முழுவதும் ஒரு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
துருவ் ரதி, CJP தலைவர் அதிரடி கைது:
போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் இரவோடு இரவாக 400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, CJP அமைப்பின் நிறுவனரான அபிரீத் தீப்கே டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன், அவர் பயணித்த விமானத்தினுள்ளேயே வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் காவலில் எடுக்கப்பட்டார். அதேபோல, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க டெல்லிக்கு வர முயன்ற பிரபல யூடியூபர் துருவ் ரத்தியை, குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குர்கான் காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்திருப்பது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
CJP அமைப்பினரின் குற்றச்சாட்டு:
தலைநகரில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், தடை உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டுப் போராட்டத்தில் பங்கேற்பேன் என துருவ் ரத்தி உறுதியாகத் தெரிவித்த காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் விளக்கியுள்ளனர். மறுபுறம், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு CJP அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் போராட்டங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறிக்கொண்டே, மறுபுறம் மெட்ரோ, ரயில் சேவைகளை நிறுத்தியும், சாலைகளை அடைத்தும் அரசாங்கமே பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியத்தையும் போக்குவரத்து ஸ்தம்பிப்பையும் உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முடக்கப்பட்ட மெட்ரோ ரயில், இணையதளச் சேவைகள்:
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லியின் பொதுப் போக்குவரத்து மற்றும் இணையதளச் சேவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ராஜீவ் சௌக், புது டெல்லி, மத்திய செயலகம், படேல் சௌக் மற்றும் காஷ்மீரி கேட் உள்ளிட்ட 45 முக்கிய டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல, சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 250-க்கும் மேற்பட்ட தொலைதூர மற்றும் உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜன்பத் – கடமைப் பாதை சந்திப்பைச் சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 24 மணி நேரத்திற்கு இணையதளச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தரில் 7 அடுக்கு இரும்புத் தடுப்புகள்:
கடந்த ஜூலை 20-ஆம் தேதி வினாத்தாள் கசிவு போராட்டத்தின் போது நடந்த மோதல்கள் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டு, இம்முறை டெல்லி காவல்துறை மிகவும் திட்டமிடப்பட்ட இரண்டு முக்கிய இலக்குகளுடன் களமிறங்கியுள்ளது. ஒன்று சட்டம்-ஒழுங்கை முழுமையாகப் பராமரிப்பது; மற்றொன்று காவல்துறை மீது முறையற்ற தாக்குதல்கள் அல்லது அத்துமீறல்கள் பற்றிய விமர்சனங்கள் எழாமல் தடுப்பதாகும். இதற்காக ஜந்தர் மந்தர், ஜன்பத், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் டெல்லி காவல் தலைமையகம் அடங்கிய 1.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதி மிகவும் உணர்திறன் மிக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு மட்டும் 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் செல்லும் பாதையில் 7 அடுக்கு வெல்டிங் செய்யப்பட்ட இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.