‘டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான்’.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, பயங்கரவாதத்தின் மீது இந்தியா சகிப்புத்தன்மை காட்டாது என்பதும் கண்டிப்பாக உறுதி செய்யப்பட்டது.
டெல்லி, நவம்பர் 13: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் முன்பு திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த கோரச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர்.20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைநகரில் நடந்த இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவித்தார்.




பயங்கரவாத தாக்குதல் தான்:
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 10, 2025 அன்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடி விபத்து சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாக கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் பேரில், தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத சம்பவத்தை நாடு எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவத்தின் மீதும் துளியளவும் சகிப்புத்தன்மை காட்ட முடியாது என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. கொடூரமான மற்றும் கோழைத்தனமான இந்த செயலை மத்திய அமைச்சரவை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது என்றார்.
மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்… தேடப்பட்டு வந்த கார் கண்டுபிடிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்
தீபாவளிக்கே சதித்திட்டம்:
முன்னதாக, டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்தில் சதித்திட்டத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு, டிசம்பர் 6ஆம் தேதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) கார் வெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.