டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிக்கும் மருத்துவர்கள்.. வெளியான பகீர் தகவல்!!
Delhi car blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் அடுத்தடுத்து மருத்துவர்கள் சிக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துமனையில் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர்கள் திட்டமிட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி, நவம்பர் 12: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது தீவிரவாத செயலா, தற்கொலை படை தாக்குதலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் என்ஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, இந்த தாக்குதலை நடத்தியது காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதேசமயம், வெடிமருந்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராத விதமாகவும் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைநகரில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ள இடத்தில் நடந்த இச்சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி உறுதி
ஒயிட் காலர் பயங்கரவாதம்:
அந்தவகையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் மருத்துவர்கள் குழு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஒயிட் காலர் (White Collor ) பயங்கரவாதம் என்ற புதிய பாணியை பயங்கரவாத இயக்கங்கள் கையாண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் தொடர் விசாரணையில் ஷாஹீன் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் ஏற்கெனவே, காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஷாமில் கானேய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். லால் பாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்தின் காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முஷாமில் கானேய் உடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத் உல் மொமினாத் அமைப்பின் இந்திய பிரிவை ஷாஹீன் ஷாஹித் நிறுவி தலைமை வகித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..
அதோடு, மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனால், பல்கலைக்கழக வளாகம் மற்றும் நிதியும் பயங்கரவாத உபகரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டுவெடிப்புக்கு காரணமான மருத்துவர் உமர் முகமது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு மேற்கண்ட மருத்துவர்கள் தொடர்பில் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. இவரே காரை வாங்கி இந்த வெடிப்புக்கு பயன்பத்தியுள்ளார். இந்த குண்டுவெடிப்பில் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது.