சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!
Bomb threat: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவ எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும், அரசு அலுவலகங்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சென்னை, நவம்பர் 13: சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த 5 விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் நேற்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், கே.என்.நேரு ஆகியோர் வீடுகளுக்கும் டிஜிபி அலுவலகம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வரும் மிரட்டல்களைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்காளர் திருத்தப் பட்டியலை திமுக எதிர்ப்பது இதற்குதானா? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
முன்னதாக, டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முன்பு திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த கோரச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைநகரில் நடந்த இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




5 சர்வதேச விமான நிலையங்களுக்கு மிரட்டல்:
இதனிடையே, ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், ‘இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று, ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டும், வெடிகுண்டு நிபுணர்களுடனும், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
நடுவானில் விமானம் சிதறும் என மிரட்டல்:
இதேபோல், மும்பையில் இருந்து வாரணாசிக்கு சென்ற, ‘ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வாரணாசி விமான நிலையத்துக்கு, இ – மெயிலில் வந்த இந்த மிரட்டலில், விமானத்தில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து நடுவானில் விமானம் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதிலும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!
தொடர்ந்து, வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணியர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினரும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.