நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 பேர்..
Vice President Of India: இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், நிதீஷ் குமார், மனோஜ் சின்ஹா, வி.கே சக்ஸீனா, ஹரிவன்ஷ் உள்ளிடோர் அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூலை 23, 2025: இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் தனது உடல்நிலை குறைவு காரணமாக திடீரென நேற்று முன்தினம் அதாவது ஜூலை 21 2025 அன்று ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் வழங்கினார். 73 வயதான ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் துணை ஜனாதிபதியின் ராஜினாமா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜக்தீப் தன்கர் முன்னதாக மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் அதற்கு முந்தைய காலத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் துணை ஜனாதிபதியாக 2022 ஆம் ஆண்டு பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதியாக என்ன தகுதிகள் வேண்டும்?
துணை ஜனாதிபதியின் ராஜினாமாவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ நாட்டுக்கு சேவையாற்ற ஜக்தீப் தன்கருக்கு குடியரசு துணைத் தலைவர் உட்பட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றால் அவர் எந்த ஒரு அரசு பதிவிலும் இருக்க கூடாது.
அதே போல் 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ’நலமுடன் வாழ்க’ ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
அடுத்த துணை ஜனாதிபதி யார்?
அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலரிடம் இருக்கும் நிலையில் மனோஜ் சின்ஹா, நிதீஷ் குமார், ஹரிவன்ஷ் உள்ளிட்ட பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- 74 வயதாகும் நிதீஷ்குமார் பீகார் முதலமைச்சர் ஆக பதவி வகித்து வருகிறார். இவர் அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என அம்மாநில மக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. இவர் அடுத்த தலைமுறைக்கு வழி வகுக்கும் வகையில் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பிஹார் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது, அந்த கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில் உள்ளது. எனவே இது போன்ற சூழலில் நிதீஷ் குமாரின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
- அடுத்ததாக இதில் வி.கே சக்ஸீனா இடம்பெற்றுள்ளார். 67 வயதாகும் இவர் ஆளுநராக மூன்று ஆண்டுகள் பணியில் இருந்தார். முன்னாள் கார்ப்பரேட் நிறுவனரான வி.கே சக்ஸீனா ஆம் ஆத்மி அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் டெல்லி அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். நியமனங்கள் முதல் டெல்லி ஜல் போர்டு பற்றிய கொள்கைகள் வரை முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வாலுக்கு சக்ஸீனா ஒரு முட்டுக்கட்டையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூன்றாவது இடத்தில் 66 வயதான மனோஜ் சின்ஹா இடம்பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி தனது ஐந்து ஆண்டு பதவி காலத்தை முடிக்கிறார். மனோஜ் சின்ஹா பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஸ்திரத்தன்மைக்கு பங்களித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். துணைநிலை ஆளுநர் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் துணை ஜனாதிபதி பொறுப்பு ஏற்க மிகவும் சரியான தேர்வாக இவர் இருப்பார் என கூறப்படுகிறது.
- ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஆன மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாரயண சிங் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த பதவியில் பணியாற்றி வருவதாலும், அரசாங்கத்தின் நம்பிக்கையை பெற்றிருப்பதாலும் அவர் அடுத்த துணை ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.