ஆந்திராவில் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு – முதலீட்டுக்கான முயற்சியா? தொழிலாளர்களுக்கு சுமையா?
Andhra Govt Labour Law Update : ஆந்திராவில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளதாக அம்மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இந்த புதிய முடிவு முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும், தொழில்துறை வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
ஆந்திர மாநிலத்தில் (Andhra Pradesh), தொழிலாளர்களுக்கான தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தும் முடிவை முதல்வர் சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) தலைமையிலான அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தி எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் ஆந்திராவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறும்போது, தொழிலாளர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் படி தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அதாவது 5 மணி நேரம் தொடர்ச்சியாக வேலையும் அதன் பிறகு ஒரு மணி நேர ஓய்வும் பின்னர் 5 மணி நேர தொடர்ச்சியாக வேலை என்ற முறையில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு காலாண்டும் பணி நேரம் 144 மணி நேரமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும். நம்மிடம் தொழிலாளர்களுக்கான ஏற்ற சூழ்நிலை இருந்தால் தான், தொழில்துறை முதலீட்டாளர்கள் அதிகமாக வருவார்கள் எனவும் உலகமயமாக்கலுக்கேற்ப இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பார்த்தசாரதி விளக்கமளித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்புடன் இரவு வேலைக்கான அனுமதி
முந்தைய தொழிலாளர் சட்டங்களின் படி பெண்கள் இரவில் வேலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வரும் புதிய சட்ட திருத்தம் மூலம், பெண்கள் இரவு நேரத்தில் வேலை செய்யலாம் எனவும் ஆனால் இதற்கான பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்தார். அதன் படி பெண்களின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு, கண்காணிப்பு வசதி, பணியிடம் வெளிச்சமாக இருக்க வேண்டும் போன்ற பல விதிகள் கொண்டுவரப்படும் எனவும், இவை பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்,” என அமைச்சர் பார்தசாரதி கூறினார்.
தொழிற்சங்கங்கள் கண்டனம்
ஆந்திர அரசின் இத்தகைய முடிவுக்கு அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. ராமகிருஷ்ணன், மத்திய மற்றும் மாநில அளவிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள், தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானவை. ஆந்திராவின் இந்த முடிவை எதிர்த்து வருகிற ஜூலை 9, 2025 அன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளது என அவர் தெரிவித்தார்.
ஆந்திரா அரசின் இந்த புதிய முடிவு முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும், தொழில்துறை வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும்போது, அவர்கள் உடல் மற்றும் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, குடும்பத்தோடு அவர்கள் செலவழிக்கும் நேரமும் குறையும் என்ற கவலைகளும் அதிகரித்திருக்கின்றன.