இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 1.77 லட்சம் பேர் மரணம்!
India Road Accidents: இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 1.77 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு நாளுக்கு 485 பேர் உயிரிழப்பதாகவும், இந்த பலி எண்ணிக்கை 2.3 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது .
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்கள் குறித்து ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்து மத்திய அரசு அறிக்கைகளை பெற்றது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த ஆண்டில் மட்டும் 1.77 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. இதில், கடந்த ஆண்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெற்ற நிலையில், அதில், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 117 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் 54 ஆயிரம் பேர் பலி
நாட்டின் மொத்த சாலை கட்டமைப்பில் 2 சதவீதம் பங்களிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 54,443 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021- ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து கடந்த 2023- ஆம் ஆண்டு நடைபெற்ற 4 லட்சத்து 80 ஆயிரத்து 583 சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 62 ஆயிரத்து 825 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: கொடூர விபத்து…காரில் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியான தம்பதி!
1.77 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலி
தற்போது, இந்த எண்ணிக்கை அதிகரித்து 2024- ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 117 உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2023- ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024- ஆம் ஆண்டில் 2.3% அளவுக்கு சாலை விபத்து உயிரிழப்பு அதிகரித்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பேர், கிட்டத்தட்ட 12 பேர் சாலை விபத்துகளில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 485 பேர் உயிரிழப்பு
தினசரி அடிப்படையில் பார்த்தால் ஒரே நாளில் 485 பேர் உயிரிழக்கின்றனர். இது கடந்த நான்காண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடிக்கோடிட்டு காண்பிக்கிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு உலக சாலை புள்ளி விவரத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்து உயிரிழப்பு விகிதம் சீனாவில் 4.3% ஆகவும், அமெரிக்காவில் 12.76 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் 11.89 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!



