Kantara Chapter 1 Review: சூப்பரா? சொதப்பலா? – காந்தாரா சாப்டர் 1 படத்தின் விமர்சனம்!
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான காந்தாரா படம் சூப்பர் ஹிட் அடித்தது. பான் இந்திய அளவில் புகழ் பெற்றது. இப்போது அதன் முன்னோடியாக காந்தாரா அத்தியாயம் 1 வந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம், “காந்தாரா சாப்டர் 1” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் அஜினேஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். முதலில் 2022ல் வெளியான காந்தாரா படம் பற்றி குட்டி ரீவைண்ட் செய்யலாம். மன்னர் ஒருவர் மன நிம்மதியின்றி தவிக்கும் நிலையில் நாட்டை விட்டு செல்லும்போது ஓரிடத்தில் கற்சிலை ஒன்றை கண்டு மன நிம்மதி பெறுகிறார். அதனை கொண்டு வர மலைப்பகுதி ஒன்றை மக்களுக்கு எழுதி வைக்கிறார். காலங்கள் ஓடுகிறது. அந்த இடத்தை மீட்க மன்னரின் வாரிசுகள் வருகின்றனர். ஆனால் அந்த மலைப்பகுதி இடத்தை காவல் தெய்வமான பஞ்சுருளி தெய்வம் காப்பதாக நம்பப்படுகிறது. ’
அந்த இடம் திட்டமிட்டபடி வாரிசு கைக்கு சென்றதா? இல்லையா என்பதை தெய்வ சக்தி, நில உரிமை, இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு என அழகாக காட்சிப்படுத்தி பான் இந்தியா அளவில் புகழ்பெற்றார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் பஞ்சுருளி தெய்வம் உருவானதை மையப்படுத்தி இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
Also Read: காந்தாரா சாப்டர் 1, பார்ட் 2 இல்ல.. இன்னும் நிறைய இருக்கு – ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!
படத்தின் கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடப்பதாக கதை தொடங்குகிறது. கடம்ப வம்சத்தின் போது பனவாசி காடுகளில் நடக்கும் ஒரு நாட்டுப்புறக் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. பெர்மி (ரிஷப் ஷெட்டி) காந்தார காடுகளில் நிதிப் பாதுகாவலராக இருக்கிறார். அவரது பிறப்பில் ஒரு தெய்வீக ரகசியம் இருக்கிறது. அவர் சிரமங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், சிவனின் சக்திகள் வந்து அவரைப் பாதுகாக்கின்றன. அந்த கிராம மக்கள் தொடர்ந்து சிவனை வணங்குகிறார்கள். மறுபுறம், பாங்க்ரா ராஜ்ஜிய மக்கள் காந்தாரத்தில் உள்ள கடவுளின் சிலையை தங்கள் சொந்தமாக்க முயற்சிக்கின்றனர்.
இந்தச் செயல்பாட்டில், அரசர் குலசேகரா (குல்ஷன் தேவையா) காந்தாரா மக்கள் மீது போரை அறிவிக்கிறார். இதற்கிடையில், அதே ராஜ்ஜியத்தின் இளவரசியான கனகாவதி (ருக்மிணி வசந்த்) மற்றும் அவரது தந்தை மகாராஜா ராஜசேகரா (ஜெயராம்) காந்தாரா தொடர்பாக எச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், மற்றொரு பழங்குடியினரும் ஒரு சிலைக்காக காந்தாராவுடன் போருக்கு வருகிறார்கள். கடைசியில் யார் அந்த சிலையைக் கைப்பற்றினார்கள் அல்லது காந்தாராவின் தெய்வம் மக்களுடன் இருந்ததா போன்ற பல கேள்விகளுக்கு இப்படம் விடை சொல்கிறது.
Also Read: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போனு தெரியுமா? வைரலாகும் தேதி
தியேட்டரில் படம் பார்க்கலாமா?
சில படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் போது உண்டாகும் எதிர்பார்ப்புகள் இயக்குநர் மீது மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். அதனை காந்தாரா சாப்டர் 1 பார்க்கும்போது உணர முடிகிறது. காந்தாரா முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இடையேயான எதிர்பார்ப்பை கைவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் திருப்திகரமான சூழல் அமையும். முதல் பகுதியில் ஒரு யதார்த்தமான அணுகுமுறை இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அது சற்று குறைவாக உள்ளது.
சில காட்சிகளை தவிர்த்து படத்தின் ஆக்ஷன் காட்சிகள், கிளைமேக்ஸ் காட்சியை ரிஷப் ஷெட்டி சரியாக செதுக்கியுள்ளார். இடைவேளை வரை மெதுவாக செல்லும் கதை அதன்பிறகு வேகம் பெறுகிறது. இரண்டாம் பாதியில் போர் காட்சிகளும், கடவுள் தொடர்பான உறைய வைக்கும் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், காந்தார அத்தியாயம் 1 படத்தை எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால் ரசிக்கலாம்..!