அமைதியான புரட்சி… காலம் உங்கள் பெயரை ஒளிரச் செய்யும் – சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
Kamal Haasan’s Heartfelt Tribute : நடிகர் சூர்யா அகரம் ஃபவுண்டேசன் துவங்கி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களின் இந்த உன்னத பணிக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா (Suriya) தொடங்கிய அகரம் பவுண்டேஷன் தனது 15 ஆம் ஆண்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் (Kamal Haasan), சு.வெங்கடேசன் எம்.பி, சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய கமல், “அம்மாவின் அன்பைப் போலவே கல்வியும் அகரத்தில் கிடைக்கிறது. சமுதாயத்தில் உயர்வது கல்வியால் மட்டுமே முடியும். கல்வியை நானே கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பிறருக்கும் கற்றுத் தர வேண்டும் என்பது ஒரு நீட்சி. அகரம் பவுண்டேஷன் இதற்காக பல மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் 2017-க்கு பிறகு ‘நீட்’ வந்ததால் அந்த வழி தடைபட்டது. ‘நீட்’ ஏன் தேவையில்லை என்று இப்போது அனைவருக்கும் புரிகிறது,” என்று பேசியிருந்தார்.
அமைதியான புரட்சியை தொடங்கியதாக சூர்யாவுக்கு கமல் வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யாவைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள், ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் அப்பா மதிப்புக்குரிய சிவகுமார் அண்ணா மற்றும் லட்சுமி அண்ணி, உங்கள் குடும்பம் முழுவதும் என் விரிவான குடும்பத்தின் ஒரு அங்கமாகவே நான் கருதுகிறேன். அகரம் பவுண்டேஷனின் 15 ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்த தருணம். அமைதியான புரட்சியை நீங்கள் மற்றும் உங்கள் அகரம் குழுவினர் தொடங்கியுள்ளீர்கள்.
இதையும் படிக்க : சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ!
கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை
The light you lit. @Suriya_offl #Agaram pic.twitter.com/OiwaSZdYz2
— Kamal Haasan (@ikamalhaasan) August 4, 2025
அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொருவரும் சமூகத்தை வழிநடத்தவும், எண்ணற்றோரை மேம்படுத்தவும், அடுத்த தலைமுறையில் மாற்றத்தை உருவாக்கவும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் அமைதியான வெற்றி, காலம் கனியும்போது உங்கள் பெயரை ஒளிரச்செய்யும். உங்களின் நோக்கம் மற்றும் நம்பிக்கையில் ஒரு உறவினராகவும், மக்களின் பிரதிநிதியாகவும், நாம் இருவரும் நேசிக்கும் இந்த குடியரசின் சக குடிமகனாகவும், உங்களின் இந்த உன்னத பணிக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். உங்களின் குடும்பம், நமது அன்புக்குரிய தமிழகம் உங்கள் மீது பொழிந்த அன்பை, நன்றியுடன் திரும்பக் கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : Suriya : அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா!
இந்த நிலையில் நடிகர் சூர்யா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார், அவரது பதிவில், நான் மிகவும் நேச்சிக்கிற, மரியாதை செலுத்துகிற கமல் சார், எம்பி, என்னுடைய அண்ணா, உங்கள் கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் குடும்பத்தினருக்கும். அகரத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடியது. இதயம் கனிந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.