50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா – பாராட்டு விழா நடக்குமா?
49 Years Of Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி திரைப்படம் 49 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதாவது திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜா 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.

இளையராஜா (Ilaiyaraaja) இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி படம் கடந்த 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அதன் படி இளையராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 49 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சான பார்த்தீங்களா என தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அன்று தொடங்கி இந்திய திரையிசையில் பல மாபெரும் சாதனைகளை இளையராஜா படைத்திருக்கிறார். திரைப்பட இசை மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே சிம்பொனி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.
இளையராஜா கிராமிய இசையையும், மேற்கத்திய செவ்வியல் இசையையும் கலந்து அவர் உருவாக்கிய புதுமையான பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சோகம், காதல், நட்பு, தாய் பாசம், பக்தி என அனைத்து விதமான உணர்வுகளையும் தனது இசையால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் இசைஞானி. 49 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளார். அவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவியங்களாக இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இளையராஜா இசை குறித்து அனுராக் காஷ்யப்
Anurag Kashyap blasts current-gen Tamil music in movies.
— Films and Stuffs (@filmsandstuffs) May 11, 2025
இந்த நிலையில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா பாடல்கள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பான் இந்திய படங்களுடன் போட்டிபோட ஆரம்பித்துவிட்டன. இப்பொதெல்லாம் தமிழ் பாடல்களில் அதிகம் ஆங்கில வார்த்தைகள் இருக்கின்றன. வெளிநாட்டு ராக் இசை போல தமிழ் சினிமா பாடல்களும் ஆங்கிலத்துக்கு மாறி வருகின்றன. அவை தமிழ் பாடல்களே இல்லை. முன்பெல்லாம் இளையாராஜா போன்றோரின் பாடல்களை ஹிந்தியில் வாங்கி பயன்படுத்தினோம். என்று பேசினார். அவர் குறிப்பிட்டது போல இளையராஜா அவ்வளவு ஒரிஜினலான இசையை வழங்கி வந்தார்.
இளையராஜாவின் பின்னணி இசை குறித்து பேசிய மணிரத்னம்
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய கிளாசிக்கல், நாட்டுப்புற இசை என பல இசை வடிவங்களை தனது இசையில் கலந்து, ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கினார். திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பின்னணி இசையை அமைப்பதில் இளையராஜா ஒரு முன்னோடி. அவரது பின்னணி இசை, படத்தின் உணர்வுகளை பல மடங்கு அதிகரிப்பதாக பல இயக்குநர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். மணிரத்னம் ஒரு பேட்டியில், இளையராஜாவுக்கு ஒரு படத்தில் எந்த எடத்தில் இசை சேர்க்கக் கூடாது என்பது தெரியும். அதுதான் அவருக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று பேசியிருந்தார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளை குவித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாராட்டு விழா நடக்குமா?
இளையராஜாவின் இசை வெறும் பாடல்களாக மட்டும் இல்லாமல், பலரது வாழ்க்கையின் அங்கமாக, நினைவுகளின் சின்னமாக விளங்குகிறது. அவரது இசை பலருக்கு ஆறுதலாகவும், உத்வேகமாகவும் இருந்து வருகிறது. திரையுலகில் 50 ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இளையராஜா. இத்தகையை மாபெரும் சாதனையை செய்திருக்கும் அவருக்கு தமிழ் திரையுலகினர் ஒன்று கூடி பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.