நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..
Robo Shankar Demise: நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமலை நோயால் பாதிகப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, செப்டம்பர் 19, 2025: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பின் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் திகழ்ந்தார். பின்னர் அவர் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களான ஜீவா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, விஜய், விஷ்ணு, விஷால், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், அஜித், விக்ரம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக அவர் தனித்த இடத்தைப் பெற்றிருந்தார்.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரோபோ சங்கர்:
சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி, அது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அவரது குடும்பத்தினர், “அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், ரோபோ சங்கர் மீண்டும் உடல்நலக் குறைவால் செப்டம்பர் 16, 2025 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 18, 2025 இரவு உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கள்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “துறை கலைஞர் ரோபோ சங்கர் மறைவு செய்தி அறிந்து வருத்தமுற்றேன். சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்துத் துறைகளிலும் மக்களை மகிழ்வித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் செய்தி வெளியிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்:
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 18, 2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “பிரபல நகைச்சுவை நடிகரும் கழக நட்சத்திர பேச்சாளருமான ரோபோ சங்கர் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படிப்படியாக முன்னேறி வந்து தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்பு சகோதரர் ரோபோ சங்கர் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று” என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்.. ஷாக்கான காவலர்கள்… நடந்தது என்ன?
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்: “சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல்நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அண்ணாமலை இரங்கல்:
தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், திரு. ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
திரு. ரோபோ சங்கர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா… pic.twitter.com/AzDqEVD1BP
— K.Annamalai (@annamalai_k) September 18, 2025
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை: “தமிழக மக்களின் உள்ளங்களில் நகைச்சுவை நடிகராக இடம்பிடித்த ரோபோ சங்கர் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டார்.
மேலும் படிக்க: பிரச்சனை எடப்பாடி பழனிசாமி தான்.. அண்ணாமலை நல்ல நண்பர் – டிடிவி தினகரன்..
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த ரோபோ சங்கர் மறைவு செய்தி வேதனையளிக்கிறது. அவர் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில் வயதில் இளமையாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
திரையுலகினர் அஞ்சலி:
தமிழ் திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் இறுதி சடங்கு செப்டம்பர் 19, 2025 அன்று பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.