தவெகவின் கூட்டணி கணக்கு…4 கட்சிகளுக்கு குறி…விஜய் அமைக்கும் வியூகம்!
Tvk Leader Vijay Targets 4 Parties For Alliance : 2026 சட்ட மன்ற தேர்தலில் வலிமையுடன் போட்டியிடுவதற்காக 4 முக்கிய கட்சிகளை தனது கூட்டணியில் இணைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது .
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் மையமாக வைத்து பல்வேறு அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இதில், முக்கியமாக முதல்வர் வேட்பாளராக விஜய்யை ஏற்கும் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனவும், அப்படி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தனது கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் தெள்ளத் தெளிவாக தெரிவித்து இருந்தார். இதனால், கூட்டணி ஆட்சியை விரும்பும் கட்சிகள் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணையும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தற்போது வரை தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் எந்த கட்சியும் இணையாமல் உள்ளது. இதனிடையே, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் அந்த கட்சியில் அதிரடியாக இணைந்தனர். இது, அந்த கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு
இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படும் என்று எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இருந்தாலும், தமிழக வெற்றிக் கழக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், கூட்டணி தொடர்பாக விஜய் சூசகமாக பேசி இருந்தார்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!




கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரம் மூலமாக
இதில், கூட்டணி விவகாரத்தில் சஸ்பென்ஸ் இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும் என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, அவர் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரத்தின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 4 முக்கிய கட்சிகளை தனது கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை தனது கூட்டணியில் விஜய் இணைக்க இருப்பதாக வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக- அதிமுக கூட்டணிக்கு இணையாக
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைய வேண்டும் என்று விஜய் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி பேச்சு வார்த்தையே தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.
மேலும் படிக்க: விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!