கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!
Tvk Executives Present At CBI Office: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகிய மூவரும் இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 29) நேரடியாக ஆஜராகி உள்ளனர்.
தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரு வயது குழந்தை, திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடி என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: திருப்பூரில் திமுக மகளிரணி மாநாடு.. திரளும் 2 லட்சம் பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்




ஒரு நபர் ஆணையம்- எஸ்ஐடி குழு விசாரணை
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது.
சிபிஐ விசாரணை- நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு
இதனிடையே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிபிஐ விசாரணையும், அவர்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு மாநில சிறப்பு புலனாய்வு குழுவிடமிருந்து, சிபிஐ அதிகாரிகளுக்கு கை மாறியது.
தமிழகத்தில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள்
தற்போது, சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விசாரணை மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களை சேகரித்தனர். மேலும், விஜயின் பரப்புரை பயணம் திட்டமிடப்பட்டது முதல் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது வரையிலான அனைத்து தகவல்களையும் கேட்டறிந்தனர். இவ்வாறாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ஒவ்வொருவரின் தலையில் ரூ.1.27 லட்சம் கடன்…தமிழிசை செளந்தரராஜன் கொந்தளிப்பு!