விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!
Tamilnadu Assembly Election: அதிமுகவின் அடுத்த இலக்கு அஜித் ரசிகர்களா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "அஜித் ரசிகர்கள் 90 சதவீதம் பேர் ஏற்கனவே அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் விரும்பித் தலைவரிடம் புகைப்படங்களைக் கொடுக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அஜித் புகைப்படத்துடன் இபிஎஸ்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் முன்பு எப்போதும் இல்லாதளவு, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகை மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலவும் அரசியல் சூழல் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிக்க: தமிழக தேர்தல் “பிக்பாஸ்”.. 234 தொகுதிகள்.. 4,500 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!
தொடக்கத்தில் விஜய்யை வரவேற்ற அதிமுக:
ஆரம்பத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தனர். சட்டமன்றத்தில் கூட விஜய்க்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் தவெக கொடிகள் பறப்பதைக் கண்டு “கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது” என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், தவெக மாநாட்டில் “விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர்” என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அதிமுக – தவெக கூட்டணி அமையும் வாய்ப்பு மங்கியது. இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் விஜயைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
அஜித் ரசிகர்களை நோக்கி நகரும் அதிமுக:
விஜய்யுடனான கூட்டணி அமையாத நிலையில், அதிமுக தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்களைக் கவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டங்களில் இளைஞர்கள் அவருக்கு நடிகர் அஜித்தின் படங்களைப் பரிசாக வழங்குவதும், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசியதும் இந்த வியூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜியின் விளக்கம்:
இது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “அஜித் ரசிகர்கள் 90 சதவீதம் பேர் ஏற்கனவே அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் விரும்பித் தலைவரிடம் புகைப்படங்களைக் கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், 2011 தேர்தலில் தனது வெற்றிக்கு விஜய் ரசிகர்களும் கடுமையாக உழைத்ததை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தவெக தரப்பு பதில்:
அதிமுகவின் இந்த நகர்வுகள் குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறுகையில், “அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டார்கள்” என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் ஏற்படக்கூடிய வாக்கு இழப்பை, அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் ஈடுகட்ட அதிமுக முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த ‘ரசிகர் மன்ற அரசியல்’ தேர்தலில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.