தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய் இடத்திற்கு த்ரிஷா வருகிறாரா?
Tamilnadu Assembly Election Result : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில், அவர் ராஜினாமா செய்யும் ஒரு தொகுதியில் அவரது தந்தை சந்திர சேகர் அல்லது நடிகை த்ரிஷா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று திங்கள்கிழமை மே 4- ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் 104 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. இதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகின்றனர். அதன்படி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 51,314 வாக்குகளை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தப்பட்டியாக திமுக வேட்பாளர் ஆர். டி. சேகர் 29,325 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி கிழக்கு – பெரம்பூரில் விஜய் முன்னிலை
இதே போல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 36, 724 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 23, 215 வாக்குகளுடனும், அதிமுக வேட்பாளர் கே. ராஜசேகரன் 1856 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால், ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் எம்எல்ஏவாக தொடர முடியாது. எனவே, தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியில் த்ரிஷா போட்டி
அது என்ன தொகுதி என்ன என்பது விஜய் தரப்பிலிருந்து பின்னர் தெரிவிக்கப்படும். இந்த நிலையில், விஜய் ராஜினாமா செய்யும் சட்டமன்ற தொகுதியில் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அல்லது நடிகை திரிஷா போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், யார் போட்டியிடப் போகிறார் என்ற முழு விவரம் தற்போது வெளியாகவில்லை. இருந்தாலும், கடந்த சில நாட்களாக நடிகை திரிஷா அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகின.
விஜய் வீட்டுக்கு வருகை தந்த நடிகை த்ரிஷா
அத்துடன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நடிகை த்ரிஷா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.