2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!
2026 Tamil Nadu Assembly Election Nomination | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. இந்த வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 06, 2026 உடன் முடிவடைகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 30 : தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30, 2026) தொடங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் 23-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்
இந்தியாவில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அந்த வகையில், தமிழகம் ஏப்ரல் 23, 2026 வாக்குப்பதிவை எதிர்க்கொள்ள உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் கட்சிகளும் இணைந்து தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை கட்சிகள் கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை கடந்து இறுதி வாக்களர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இதையும் படிங்க : தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 06, 2026 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதியம் மூன்று மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விதிமுறைகள்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான சில விதிமுறைகளும் அமலில் உள்ளன. அதாவது, இன்று முதல் ஏப்ரல் 06, 2026 வரை காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், 3 வாகனங்களில் அதுவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வர வேண்டும். அந்த வாகனங்களை தேர்தல் நடத்தை அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீட்டர்களுக்கு முன்னாலே நிறுத்திவிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் மூன்று நபர்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி.. வெளியான புதிய தமிழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
வேட்புமனு தாக்கல் செய்ய 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தாலும் அதில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் மீதமுள்ள 4 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.