தமிழக பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு..களமிறங்கிய எல்.முருகன்- அண்ணாமலை!
BJP Tour In Charges: தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காகவும், வெற்றியை வசப்படுத்துவதற்காகவும் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதேபோல, தமிழக பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் நடை பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.இந்த நிலையில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட 3 பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தொகுதிகள்
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராதாபுரம், திருப்பரங்குன்றம், உதகமண்டலம், திருப்பூர் வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜகவின் சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல, மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர், பத்மநாபபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தொகுதிகளில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு குறைந்தது 2 சட்டமன்ற தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 7 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மருதமலை முருகன் கோயில் தைப்பூசம்…இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
சுற்றுப்பயணத்தில் தொகுதியில் இரவு தங்க வேண்டும்
இந்த சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 2 முறையாவது முழுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த தொகுதிகளில் ஒவ்வொரு முறையும் சுற்றுப் பயணத்தின் போது 24 மணி நேரம் செலவிட வேண்டும். அதாவது, இரவில் அந்த பகுதியில் தங்க வேண்டும். அதன்படி, அந்தந்த தொகுதிகளில் உள்ள சமுதாயத் தலைவர்களுடன் சந்திப்பு, சட்டமன்ற குழுவோடு சந்திப்பு, தொகுதியில் உள்ள மாவட்ட மண்டல அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு, தொகுதியில் உள்ள பிரிவு நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஒரு சக்தி கேந்திரத்திற்கு நேரடியாக சென்று ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை
பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம்
திட்டமிட்டு செயல்பட வேண்டும்
மேலும், ஒரு வாக்குச்சாவடிக்கு நேராக சென்று பலம் வாய்ந்த வாக்குச்சாவடி பற்றி வழிகாட்டுதல், காரியகர்த்தாவோடு தனிப்பட்ட முறையில் பேசுதல், ஒரு தொகுதி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் அளித்தல், ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணி செய்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு இணைந்து செல்லுதல், தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுதல் வேண்டும். எல்லா நிகழ்வும் ஒரு சுற்றுப்பயணத்தில் முடிக்க வேண்டும் என்று பாராமல் தொடர் சுற்றுப்பயணத்திலும் தொகுதிக்கு தகுந்தவாறு நாம் திட்டமிட்டு செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக துணிநூல் துறைக்கு ரூ.912.97 கோடி முதலீடு: 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..