பாமகவுக்கு வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்…கெளரவத் தலைவர் ஜி.கே.மணி!
PMK GK Mani: வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியை தேர்வு செய்வதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சிக்கல் இருப்பதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ஜி. கே. மணி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்த அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.

வெற்றி கூட்டணியை தேர்வு செய்வதில் பாமகவுக்கு சிக்கல்
பாட்டாளி மக்கள் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று சனிக்கிழமை (ஜனவரி 31) நேர்காணல் நடத்தினார். இதில், பாமகவைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அப்போது, அந்தக் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது அந்தக் கட்சியின் பலமாகும். அந்தக் கட்சியை வழி நடத்தக்கூடிய தலைவருக்கான சக்தியாகும். அதையும் தாண்டி அந்த கட்சி அமைக்கும் கூட்டணி, கட்சி அறிவிக்கும் வேட்பாளர், அந்த வேட்பாளர்களுக்கு அவர்களது தொகுதியில் இருக்கக்கூடிய முக்கியத்துவம் ஆகியவைதான் அந்த கட்சியின் வெற்றியே தீர்மானிக்கும். அதன் அடிப்படையில் தான், மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டு சரியான முடிவு எடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு நெடுக்கடியான சூழ்நிலையை சந்தித்தாலும், கிராம பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு மக்கள், மூத்த நிர்வாகிகள், பாமக அனுதாபிகள் ஆகியோர் ராமதாஸ் பின்னால் உள்ளனர்.
தேர்தலில் ராமதாஸ் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்
அவர்கள் வரும் தேர்தலில் ராமதாஸின் கையை வலுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தல் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் 3 நிர்வாக குழு கூட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மிக சிறந்த முடிவை மருத்துவர் ராமதாஸ் எடுப்பார். தேர்தல் நேரத்தில் கூட்டணி விவகாரத்தை கட்சியின் தலைமையோ அல்லது கட்சி சார்ந்த நபரோ பேச்சுவார்த்தை நடத்துவர். இது அனைத்து கட்சிகளிலும் இயல்பான ஒன்றாகும்.
மேலும் படிக்க: தமிழக வாக்காளர் பட்டியலில் சேர ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்.. 22 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்..
வெற்றிக் கூட்டணியை தேர்வு செய்வதில் சிக்கல்
கூட்டணி தொடர்பான இறுதி முடிவே இறுதியானது. அந்த முடிவை மருத்துவர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். கூட்டணி அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வெற்றி கூட்டணி எது என்பதை கண்டறிவது ராமதாஸுக்கு சிக்கல் உள்ளது. மாம்பழம் சின்னமும். பாமகவும் யாருக்கு சொந்தம் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதனை மருத்துவர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் எதுவும் தெரிவிக்க முடியாது.
பாமக அங்கீகாரம் பெறுவதே நோக்கம்
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிப்பார்கள். சமூக நீதி மீதான அக்கறை, தமிழக வளர்ச்சி ஆகியவை மீது ராமதாஸ் பற்று கொண்டுள்ளார். நல்ல கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டும். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியில் ஒற்றுமையே தான் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “எம்ஜிஆர், ஜெயலலிதாவே என் ரோல் மாடல்”.. விஜய் பரபரப்பு பேட்டி!!