நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..

இதுவரை திமுக தரப்பில் முழுமையான பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை சந்தித்து மாநிலங்களவை இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீடிக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Feb 2026 08:04 AM

 IST

சென்னை, பிப்ரவரி 26, 2026: வரும் 2026 மார்ச் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அன்று காங்கிரஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி:

தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆளும் திமுக கட்சியை எடுத்துக்கொண்டால், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மையம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நடைபெற இன்னும் சில காலமே உள்ள சூழலில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக துரைமுருகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக திமுக–காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மற்றொரு தரப்பு, அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவையே பின்பற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் திமுக–காங்கிரஸ் கூட்டணி “மதில் மேல் பூனை” நிலைமையில் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

நீடிக்கும் இழுபறி – தவெக உடன் பேச்சுவார்த்தையா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டு கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். அந்தக் கடிதத்தில் காங்கிரஸுக்கு 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், இரண்டு மாநிலங்களவை இடங்கள் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை திமுக தரப்பில் முழுமையான பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை சந்தித்து மாநிலங்களவை இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி ஏதேனும் உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளை நடத்துகிறோமா?” என தெரிவித்தார். மேலும், “எங்களுக்கு 12 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் உள்ளன. பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் பலத்தை அனைவரும் உணர்வார்கள். அதனால் தான் எங்களுக்கு திறந்தவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!

சென்னை வரும் ராகுல் காந்தி:

இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக–காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சூழலில், மார்ச் 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடனும் ஆலோசனை நடத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாகும் என கூறப்படுகிறது.

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!