தவெகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய்யை திடீரென புகழ்ந்து பேசிய அருள் எம்எல்ஏ..என்ன காரணம்!
PMK Arul MLA: தமிழக வெற்றிக் கழகத்துடன், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கு, அந்தக் கட்சியின் எம்எல்ஏ அருள் பதில் அளித்ததுடன், தவெக தலைவர் விஜய்யை திடீரென புகழ்ந்து பேசி உள்ளார். இது அரசியிலில் உற்று நோக்கப்படுகிறது.

தவெக-பாமக கூட்டணி குறித்து அருள் விளக்கம்
பாமக-தவெக கூட்டணி தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் எம் எல் ஏ சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதும், அந்த கட்சி, மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதும் இயல்பான ஒன்றாகும். இதே போல, பாட்டாளி மக்கள் கட்சியிடம் சில கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகிறது. எங்கள் கட்சியும், சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என்ற பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறது. எனவே, தமிழகத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக வலுவாக உள்ளது. மருத்துவர் ராமதாஸ் யாரை கை காண்பிக்கிறாரோ அவர்தான் வருங்கால முதலமைச்சர் ஆவார்.
ராமதாஸ் இடம் பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்
எந்த கட்சிகள் எப்படி பேசினாலும், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சூது, வாது, சூழ்ச்சி இல்லாத ஒரே தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான். இதுதான், மருத்துவர் ராமதாஸின் 46 ஆண்டு கால நேர்மையான அரசியல் பயணம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களுக்கு மக்களின் ஆதரவு வேண்டும்.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!
விஜய்யை புகழ்ந்து பேசிய அருள் எம்எல்ஏ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சுற்றி ஏராளமான இளைஞர்கள் கூட்டம் உள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் வாக்களித்து விஜய் முதல்வராக வருகிறார் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்று எண்ணினால் அது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. எனவே, புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் வரட்டும்.
தவெகவுடன், பாமக கூட்டணி அமைக்கிறதா
எனவே, இதில் எது நடந்தாலும் அதன் நன்மைக்கே என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன், பாட்டாளி மக்கள் கட்சியின் ( மருத்துவர் ராமதாஸ் தரப்பு) கூட்டணி அமைக்க உள்ளதாகவும், இது தொடர்பான கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருள் தவெக தலைவர் விஜய்யை திடீரென புகழ்ந்து பேசி உள்ளார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..