சர்கார் படத்தை நிறுத்தினோம், அம்மா லேப்டாப்பை ஒடைச்சாங்க… விஜய்க்கு ராஜன் செல்லப்பா எச்சரிக்கை
AIADMK vs Vijay : தவெக தலைவர் விஜய் அதிமுகவை மறைமுகமாக ஊழல் கட்சி என்று விமர்சித்த நிலையில், சர்கார் படத்தை ஓட விடாமல் நிறுத்தியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பரபரப்பு தகவலை தெரிவித்திருக்கிறார். விஜய்க்கு எச்சரிக்கும் விதமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, ஜனவரி 26 : அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தவெக தலைவர் விஜய்க்கு (Vijay) கடும் எதிர்ப்பு விதமாக பேசியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சர்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய மடிக்கணினியை உடைக்கும் காட்சி இடம்பெற்றது. மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிடாதீர்கள், விஜய் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சர்கார் படத்தை மதுரையில் ஓடவிடாமல் நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அவர் பேசியதற்கான பின்னணி குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மதுரையில் சர்கார் படத்தை ஓடவிடாமல் நிறுத்தியதாக ராஜன் செல்லப்பா கருத்து
சர்கார் திரைப்படத்தில், அரசின் இலவச நலத்திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்ற கருத்துடன் அரசு வழங்கிய மடிக்கணினியை உடைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த மடிக்கணினி திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாகும். அந்த காட்சிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த காட்சி பின்னர் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.




இதையும் படிக்க : “வாயிலேயே வடை சுடுகிறார் விஜய்”.. செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!!
இதனிடையே, சமீபத்தில் தவக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல்மிக்க கட்சி என பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, விஜய்யை நேரடியாக சாடி பேசியுள்ளார். “நான் இதற்கு முன் இப்படி பேசவில்லை. ஆனால், அவர் அதிமுகவை தொட்டுவிட்டார். இனிமேல் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது” என அவர் கூறினார்.
ராஜன் செல்லப்பாவின் எக்ஸ் பதிவு
சர்க்கார் படம், மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கிய லேப்டாப் திட்டத்தை உடைப்பது போல் காட்சியுடன் வெளியான போது மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட வேண்டாம் @actorvijay pic.twitter.com/wDD2qYJp1a
— V V Rajan Chellappa – SayYesToWomenSafety&AIADMK (@rajanchellppavv) January 26, 2026
இதையும் படிக்க : பாஜக கூட்டணியில் பாமக-தேமுதிக…நயினார் நாகேந்திரன் அடித்த டிவிஸ்ட்!
மேலும் பேசிய ராஜன் செல்லப்பா, “புதிய கட்சி என்றால் திட்டம் இருக்க வேண்டாமா? எங்கள் கொள்கை இது, ஆட்சிக்கு வந்தால் இதை செயல்படுத்துவோம் என்று சொல்ல வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “சர்கார் என்ற படம் வந்தது. அதில் அம்மா கொண்டு வந்த மடிக்கணினியை போட்டு உடைத்தார்கள். அதனால் அந்த படத்தை மதுரையில் ஓடவிடாமல் நிறுத்தினோம். அதற்குப் பிறகுதான் அந்த காட்சியை மாற்றினார்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த உரையின் காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ராஜன் செல்லப்பா, “அம்மா கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதால், சர்கார் படம் வெளியான போது மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்” என பதிவிட்டு, விஜய்யை குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.