பூதாகரமாக வெடித்த உட்கட்சி விவகாரம்.. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
ADMK District Secretaries Meeting: அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, நவம்பர் 5, 2025: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், நவம்பர் 5, 2025 தேதியான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்கத் தேவையான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; அப்போதுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு பரிந்துரை செய்தார். ஆனால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் கூறியதற்காக, அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அதாவது, கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
மேலும் படிக்க: ‘ராமதாஸூடன் இணைய மாட்டேன்’ காரணம் சொல்லி பரபரப்பை கிளப்பிய அன்புமணி!!
அதனைத் தொடர்ந்து, தேவர் ஜெயந்தி அன்று அதிமுகவிலிருந்து பிரிந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் மேற்கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
திமுகவில் இணைந்த எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்:
இதன் பின்னர், நவம்பர் 4, 2025 அன்று செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை!!
இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், நவம்பர் 4, 2025 தேதியான நேற்று, ஓ. பி. எஸ் ஆதரவாளர் மற்றும் ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திடீரென திமுகவில் இணைந்தார். இது மேலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த சூழலில், அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து முக்கியமான ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், தேர்தல் வியூகம், எந்தெந்த தொகுதிகள் வலுவாக உள்ளன, தேர்தல் பணிகள், மக்கள் பிரச்சனைகள், மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.