‘ராமதாஸூடன் இணைய மாட்டேன்’ காரணம் சொல்லி பரபரப்பை கிளப்பிய அன்புமணி!!
Pmk internal issue: பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து, கட்சி ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் போட்டி போட்டு இழுத்து வருகின்றனர்.
தருமபுரி, நவம்பர் 05: ராமதாஸை சுற்றி இருக்கும் துரோகிகள் இருக்கும் வரை, அவருடன் சேர மாட்டேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நாளுக்கு நாள் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில், நேற்று ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணி ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. இதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, தன்னுடன் இருக்கும் பொறுப்பாளர்களை அவமானப்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டிவிடும் வகையிலும் அன்புமணி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். அதேசமயம், பாமக எம்எல்ஏ அருள் தான், அன்புமணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு அவர்கள் தரப்பில் சிசிடிவி ஆதராங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
பாமக எம்எல்ஏ கார் மீது தாக்குதல்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை அன்புமணி ஆதரவாளர்கள், வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அருள் உடன் சென்ற ஆதரவாளர்களும் பதிலுக்கு கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் சேதமடைந்தது.இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.




தாக்குதலுக்கு அன்புமணி தான் காரணம்:
இதையடுத்து, அன்புமணி தற்போது அநாகரிகமான அரசியலையும், வன்முறை அரசியலையும் கையில் எடுத்துள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாறி மாறி குற்றச்சாட்டு:
மறுபுறம் இந்த விவகாரத்தில் அருள் மீதே தவறு என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதோடு, தாக்குதல் நடந்தது தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்து, எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தான் அன்புமணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பதில் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
ராமதாஸூடன் இணைய மாட்டேன்:
இந்தச் சூழலில் ராமதாஸுடன் இணையப் போவதில்லை என்று அன்புமணி கூறியுள்ளார். தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமதாசை சுற்றி துரோகிகள் உள்ளதாகவும், அவர்கள் தான் ராமதாஸிடம் இருந்து தன்னை பிரித்தாகவும் தெரிவித்தார். அந்த தீய சக்திகள், துரோகிகள், திமுகவின் கைக்கூலிகள் அவருடன் இருக்கும் வரை அங்குச் செல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.