இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்… ஏஐயில் சாதித்த சென்னை இளைஞர் – யார் இந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ்?
Success Story : எம்3எம் ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025 என்ற உலக அளவில் பணக்காரர்கள் கொண்ட பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இளம் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புகழ்பெற்ற Perplexity AI நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

சாதிக்க வேண்டும் என முடிவு செய்தால் வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலர் உதாரணமாக திகழ்கின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் அரவிந்த் ஸ்ரீநிவாஸ். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உலக அளவில் அதிகரித்திருக்கிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒரு பகுதியாக கலந்துவிட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் தன்னுடைய சாதனைகளால் உலகளவில் புகழ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக எம்3எம் ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025 (M3M Hurun India Rich List 2025) என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.21,190 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரில் கடந்த 1994 ஜூன் 7ஆம் தேதி பிறந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ், வெறும் 31 வயதிலேயே இந்த பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றவர்களில் வயதின் அடிப்படையில் அவரே இளையவர். தனது பள்ளிப் பருவத்திலிருந்தே அறிவியலின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த அரவிந்த், சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் மாணவர்களுக்கு அது தொடர்பான பாடங்களையும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார். இதற்காக அவர் கம்ப்யூட்டர் விஷன், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜெனரேட்டிவ் மாடல்ஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இதையும் படிக்க : வீட்டு வாசலில் முடி வெட்டியவர்… இன்று ரஜினிகாந்த் முதல் விராட் கோலி வரை அவர் தான் ஸ்டைலிஸ்ட் – யார் அந்த அலிம் ஹகீம்?




அரவிந்த் சொந்தமாக நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்கு முன், உலகின் முன்னணி ஏஐ ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தார். குறிப்பாக ஓபன் ஏஐ, லண்டனில் உள்ள டீப்மைண்ட் (DeepMind), கூகுள் ஆகிய நிறுவனங்களில் HaloNet, ResNet-RS மற்றும் DALL·E 2 போன்ற புகழ்பெற்ற மாடல்களில் அவரும் தனது பங்களிப்பை செய்துள்ளார்.
Perplexity AI நிறுவனத்தை தொடங்கிய அரவிந்த்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரவிந்த் ஸ்ரீநிவாஸ் தனது நண்பர்களான டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் சேர்ந்து Perplexity AI என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் conversational search engine மூலம் விரைவான, துல்லியமான மற்றும் நம்பகமான பதில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை வழக்கமாக மக்கள் பயன்படுத்தி வந்த தேடல் இயந்திரங்களுக்கு மாற்றாக Perplexity தனது முத்திரையை வலுவாக பதித்துள்ளது.
சொந்தமாக நிறுவனம் தொடங்கியிருந்தாலும், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், அரவிந்த் பல ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகம் எலவன்லேப்ஸ் (ElevenLabs : text-to-speech), சுனோ (Suno – text-to-music) போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது, எதிர்கால ஏஐ வளர்ச்சி குறித்து அவரின் நம்பிக்கையை காட்டுகிறது.
இதையும் படிக்க : 18 வயதில் CEO ஆன மாணவர்… மாதம் ரூ.12 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் – சாதித்து எப்படி?
இந்தியாவுக்கு முக்கியத்துவம்
உலகளவில் Perplexity AI-க்கு மிகப்பெரிய பயனர்கள் கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதனால் அரவிந்த், இந்தியாவிலேயே பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்ஜினியரிங் ஹப்கள் உருவாக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார். மேலும் பயணம், கல்வி, ஷாப்பிங், சுகாதாரம் போன்ற துறைகளில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதோடு, Perplexity Fund என்ற தனிப்பட்ட நிதி நிறுவனத்தையும் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.