திருமணத்தில் வழங்கப்படும் மொய் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?
ITR on Wedding Gifts: இந்தியாவில் திருமணங்களின் போது பெறப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வருமானமாக கருதப்படுமா, அதற்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்துக்காக பல லட்சங்கள் செலவு செய்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் திருமணத்துக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மொய் செய்யும் பழக்கம் இருக்கிறது. ஒவ்வொரு வரும் தங்களால் இயன்ற ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்க நகை மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். ஆனால் இப்படி கிடைக்கும் மொய் பணம் மற்றும் பரிசுகளுக்கு வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டுமா என்ற சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 அன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணங்களில் இதுபோன்று பெரும் பரிசுகள் மற்றும் மொய் ஆகியவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டுமா என்பது குறித்து பார்க்கலாம். இந்திய வருமானவரி சட்டப்படி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து பரிசுகள் பெறுவது சாதாரணம். சில நேரங்களில் இப்படி பெறப்படும் பரிசுகள் வருமானமாக கருதப்படுகின்றன. பொதுவாக திருமணத்தில் பெறப்படும் பணம், நகைகள், நிலம் போன்றவை வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதையும் படிக்க : பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?
மொய் பணத்துக்கு வருமானவரி தாக்கல் செய்ய வேண்டுமா?
உதாரணமாக உங்கள் தந்தையிடம் இருந்து திருமணத்துக்காக ரூ.10 லட்சம் பெற்றால் அதற்கு வருமானவரி சட்டத்தின் படி வரி விலக்கு கிடைக்கும். குறிப்பாக உறவினர்களிடம் இருந்து பெறும் பரிசுகள், உறவினர்கள் அல்லாதோரிடம் இருந்து கிடைக்கும் ரூ.50,000 வரையிலான பரிசுகள், திருமண நிகழ்ச்சியில் பெறப்படும் மொய், தங்க நகைகள் போன்றவற்றுக்கு வரிவிலக்கு உண்டு.
வருமான வரி தாக்கல் செய்யும் முறை
திருமண பரிசுகள் வரி விலக்கு கிடைக்கும் என்றாலும் அது குறித்து வருமானவரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டும். திருமணத்தின்போது கிடைக்கும் பரிசுகள், Income From Other Sources என ஐடிஆர்-2 அல்லது ஐடிஆர்-3ல் குறிப்பிட வேண்டும்.
இதையும் படிக்க : திருமணத்துக்காக லோன் வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
மொய் பணம் கிடைக்கும்போது செய்ய வேண்டியது
திருமணத்தின்போது கிடைக்கும் பணத்தை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்வது நல்லது. இது வருமான வரி தாக்கல் செய்யும் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம். குறிப்பாக இரு தரப்பினரும் தங்களுக்கு கிடைத்த மொய் பணத்தை வங்கியில் தனித்தனியாக வைப்பது அவசியம்.
இந்தியாவில் திருமணங்களின்போது பரிசுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பெறுவது இயல்பு தான். பெரும்பாலான நேரங்களில் அதற்கு வரி விலக்கு கிடைக்கும். ஆனால் வருமானவரி தாக்கல் செய்யும்போது அது குறிப்பிடுவது அவசியம்.