நகைக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட 9 புதிய விதிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
9 New Rules for Gold Loan | இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் தொடர்பான விதிகளில் அவ்வப்போது மாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தங்க நகை கடன் குறித்து தற்போது 9 புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்ன விதிகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) இந்தியாவின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வங்கிகளுக்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நகைக்கடன் (Gold Loan) தொடர்பான 9 புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்து வரும் நிலையில், பொதுமக்களின் நலனுக்காக அவற்றை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நகைக்கடனை பொருத்தவரை வங்கி மற்றும் வங்கி இல்லாத நிதி நிறுவனங்கள் வெவ்வேறு வகையான விதிமுறைகளை பயன்படுத்தும் நிலையில், வங்கிகளும் வங்கி இல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்றும் வகையில் இந்த புதிய 9 விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நகைக்கடன் – ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 புதிய விதிகள்
- நகை அடகு வைக்கும் நபர்கள் நகை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட உரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- நகையை அடகு வைக்கும் நபர்கள் வங்கியிடம் இருந்து அதன் தூய்மை சான்றிதழை பெற வேண்டும்.
- பொதுவாகவே வங்கிகளில் தங்கத்தை மத்திப்பிடும் முறை உள்ள நிலையில், தற்போது அதற்கு கூடுதலாக சான்றிதம் பெற வேண்டும் என கூறப்படுகிறது.
- தங்க நகைகள், ஆபரணங்களுக்கு எப்போதும் போல வங்கிகளில் கடன் வாங்க முடியும். ஆனால், தங்க நாணயங்களை பொருத்தவரை வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களை மட்டுமே அடகு வைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
- தங்கத்தை போலவே வெள்ளி கட்டிகள், ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
- தங்கத்தை அடகு வைக்கும்போது ஒரு கிலோவுக்கு மேல் அடகு வைக்க அனுமதி இல்லை என்றும், அடகு வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
- நகைக்கடன் பெற அடகு வைக்கப்படும் வெள்ளியின் தூய்மை 999 ஆக இருக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- நகை அடகு வைக்கும் நபருக்கும், வங்கிகளுக்குமான ஒப்பந்தத்தில் எதற்காக நகை அடகு வைக்கிறார்கள், எவ்வளவு நகை அடகு வைக்கிறார்கள் என்பது குறித்த முழு தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- அடகு வைத்த தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய பிறகு 7 நாட்களுக்கு அவருக்கு தங்கம் திருப்பி தரப்படும். இல்லையென்றால் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் வங்கி, வாடிக்கையாளருக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட இந்த 9 புதிய விதிமுறைகளை தான் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.