Jio IPO: நாட்டின் டேட்டா பயன்பாட்டில் 60% பங்களிக்கும் ஜியோ – எதிர்கால வியூகங்களை வெளிப்படுத்திய ஆகாஷ் அம்பானி
Reliance Jio IPO: தொலைத்தொடர்பு புரட்சியின் மூலம் இந்தியாவை டிஜிட்டல் சக்தியாக மாற்றிய ஜியோ தற்போது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி, நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 7,220 காப்புரிமை ) விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அறிவித்தார்.
தொலைத்தொடர்பு புரட்சியின் மூலம் இந்தியாவை டிஜிட்டல் சக்தியாக மாற்றிய ஜியோ தற்போது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி, நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 7,220 காப்புரிமை ) விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அறிவித்தார். சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் ‘காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்த’ தரவரிசையில், உலகின் முதல் 20 விண்ணப்பதாரர்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் ஜியோ மட்டுமே என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
எதிர்கால வியூகங்களை வெளிப்படுத்திய ஆகாஷ் அம்பானி
மேலும் மெகா ஐபிஓவிற்கான ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆகாஷ் அம்பானி நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயணம் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஜியோ தனது சொந்த தொழில்நுட்பச் சூழலை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் வெளிநாட்டு அல்லது பிற நிறுவனங்களை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். நிறுவனத்திற்குள் பணியாற்றும் 12,000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கொண்ட குழுவே இந்த புத்தாக்கமான முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியது என்று அவர் கூறினார்.
மேலும் ஜூன் 30, 2026 நிலவரப்படி ஜியோ தாக்கல் செய்துள்ள 7,220 காப்புரிமைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்குச் சான்றாக உள்ளன. நுகர்வோருக்கு உயர்தர சேவைகளை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த பிரத்யேக தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். 5G நெட்வொர்க் விரிவாக்கம் குறித்துப் பேசிய ஆகாஷ் அம்பானி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜியோவின் 5G சேவைகள் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக 5G சந்தாதாரர்களைக் கொண்ட நெட்வொர்க்காக ஜியோ உருவெடுத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் தெரிவித்தார். உள்நாட்டுத் தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் மொத்த டேட்டா பயன்பாட்டில் சுமார் 60 சதவீதத்தை ஜியோ நெட்வொர்க்கே கையாள்வதாகத் தெரிவித்தார்.
நாட்டின் டேட்டா பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆகாஷ் அம்பானி குறிப்பிட்டார். தற்போது, ஒரு ஜியோ பயனர் சராசரியாக மாதம் 43.7 GB டேட்டாவைப் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் 1 GB டேட்டாவின் விலை ரூ. 228ஆக இருந்த நிலையில், 2026 நிதியாண்டிற்குள் அது கணிசமாகக் குறைந்து ரூ. 7.5ஆக மாறியுள்ளது; இது நாட்டின் சாமானிய மக்கள் அனைவருக்கும் டேட்டாவை எளிதில் சென்றடையச் செய்துள்ளது. மொபிலிட்டி , வீட்டு பிராட்பேண்ட், நிறுவனங்களுக்கான சேவைகள் ஆகிய துறைகளில் விரிவாக்கம் செய்வது மற்றும் சர்வதேச சந்தைகளில் நுழைவது ஆகியவை நிறுவனத்தின் எதிர்கால முக்கிய இலக்குகளாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 21ல் பிரம்மாண்டமான ஐபிஓ
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தனது ஐபிஓ-விற்கான ‘ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ்’ ஆவணத்தை அக்டோபர் 14 அன்று தாக்கல் செய்தது. இதற்கான பங்கு விலை வரம்பு ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ அக்டோபர் 21 அன்று தொடங்கி, அக்டோபர் 23 அன்று நிறைவடையும். 27 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நிறுவனம் ரூ. 30,213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது (விலை வரம்பின் உச்ச அளவின் அடிப்படையில்). இந்தப் பங்குகள் அக்டோபர் 28 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.