பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு.. நிர்மலா சீதாராமன் பாராட்டு..
Finance Minister Nirmala Sitharaman Welcomes the Move: உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்யவும் சில அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹21.5 வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்திய குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அந்தவகையில், இன்று காலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு?
கலால் வரி குறைப்புக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு:
In view of the West Asia crisis, the central excise duty on petrol and diesel for domestic consumption has been reduced by ₹10 per litre each. This will provide protection to consumers from rise in prices. Hon. PM @narendramodi has always ensured that citizens are protected from…
— Nirmala Sitharaman (@nsitharaman) March 27, 2026
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, மேற்கு ஆசிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு தலா ₹10 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்விலிருந்து இந்திய நுகர்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலை மாற்றங்களிலிருந்து குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி எப்போதும் உறுதி செய்து வருகிறார்” என்றும் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வரி விதிப்பு:
மேலும், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்யவும் சில அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹21.5 வரி விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹29.5 வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பின் மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்கள் முதலில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை அரசு உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு:
இந்த வரி மாற்றங்கள் மற்றும் அரசின் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகளாவிய பொருளாதாரச் சூழலால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.