ஹோம் லோனுக்கான EMI கட்டலையா? இந்த 4 விளைவுகளை சந்திக்க நேரிடும்!
Home Loan : வீட்டுக்கடன் தவணையை செலுத்த தவறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இது உங்கள் நிதி எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கக்கூடிய விஷயம். மாதத் தவணையை செலுத்தாமல் விட்டால் 4 முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் மாதத் தவணையை (EMI) நம்பி தான் வாழ்க்கை நடத்துகிறோம். நடுத்தர வர்க்க மக்களுக்கு வீடு, கார், ஸ்மார்ட் போன் என அனைத்து தேவைகளையும் மாதத் தவணை மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. ஒரு வகையில் மாதத் தவணை திட்டங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கினாலும் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கான இஎம்ஐ நாம் செலுத்த தவறினாலும் அது நமக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக ஹோம் லோன் (Home Loan) போன்ற கடன்களுக்கு சரியான நேரத்தில் மாதத் தவணை செலுத்தாவிட்டால் ஏற்படும் நான்கு முக்கியமான விளைவுகள் மற்றும் அவற்றால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுக்கடன் தவணையை தவறினால் ஏற்படும் நான்கு விளைவுகள்
1.உங்கள் கிரெடிட் ஸ்கோரில் கடுமையான பாதிப்பு
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் கடன்களை சரியாக செலுத்துகிறீர்களா என்பதை உங்கள் கிரெடிட் ஸ்கோர் மூலம் கணிக்கின்றன. அதனால் ஒரு தவணையை செலுத்த தவறுவது கூட உங்கள் நம்பிக்கையைப் பறிகொள்வதற்கே சமம். ஒரு நாள் தாமதம் கூட உங்கள் கிரெடிட் ஸ்கோரில் 25 முதல் 30 புள்ளிகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல ஒரு மாதம் தவறினால் 75-100 புள்ளிகள் வரை குறையலாம். குறிப்பாக நாம் ஒரு முறை தவறவிடும் இஎம்ஐ விவரம் கிரெடிட் ரிப்போர்டில் 7 ஆண்டுகள் வரை இடம்பெற்றிருக்கும்.
2.அபராதங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்
வீட்டுக்கடன் தவணையை செலுத்த தவறினால், அதற்காக விதிக்கப்படும் அபராதங்கள், கூடுதல் வட்டி மற்றும் கட்டணங்கள் உங்கள் மாத செலவில் சுமையை அதிகரிக்கும். தாமதக் கட்டணங்கள் பெரும்பாலும் இஎம்ஐ தொகையின் 1% முதல் 2% வரை இருக்கலாம். மேலும் வட்டி மாதத்துக்கு 2% முதல் 4% வரை உயரக்கூடும். இந்த கட்டணங்கள் சேர்ந்து உங்கள் கடனை திருப்பி செலுத்தும் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
3.சட்ட நடவடிக்கைகள் மற்றும் சொத்து பறிமுதல் அபாயம்
மாதத் தவணையை தவறவிட்டால் உங்கள் வீட்டின் உரிமையை இழக்கும் அளவுக்கு நிலையை மோசமாக்கும். 3 மாதம் தொடர்ந்து தவணை செலுத்தவில்லை என்றால், உங்கள் கணக்கு Non-Performing Asset ஆக மாறும். மேலும் வங்கிகள் உங்கள் வீட்டை ஏலம் வைத்து கடனை திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம். சொத்து பறிமுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.
4. நீண்ட கால பொருளாதார சிக்கல்கள்
இஎம்ஐ தவிர்ப்பதன் விளைவுகள் உடனடியாக அல்லாமல் நீண்ட காலமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் கடன் முழுமையாக செலுத்தப்படவில்லை எனபதை குறிக்கும். இது 50 முதல் 100 புள்ளிகள் வரை கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கக்கூடும். இதுவும் 7 ஆண்டுகள் வரை உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் இடம்பெற்றிருக்கும். மீண்டும் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் பெறுவது கடினமாகிவிடும்.
கட்டாயம் செய்ய வேண்டியவை:
ஆட்டோ டெபிட் செயல்பாட்டு மூலம் தவணையை தவறாமல் செலுத்துங்கள். உங்களுக்கு பொருளாதார சிரமம் ஏற்பட்டால் உடனே வங்கியுடன் தொடர்பு கொண்டு மாற்று திட்டங்கள் (Moratorium அல்லது Restructuring) பற்றி பேசுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்வாகம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.