ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் எதிரொலி.. பால் முதல் ஐஸ் கிரீம் வரை 700 பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்த அமுல்!
GST Rate Cut Impact | இந்தியாவில் நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமுல் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 4 அடுக்கு ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையை வெறும் 2 அடுக்குகளாக மத்திய அரசு குறைத்துள்ளது (Central Government of India). இந்த திருத்தம் செய்யப்பட்ட வரி விதிப்பு முறை செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பு முறை மாற்றத்தால் பல பொருட்களின் விலை குறையும் என கூறப்பட்டு வந்தது. அந்த நிலையில் அமுல் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த நிலையில், என்ன என்ன பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
4 அடுக்களில் இருந்து 2 அடுக்குகளாக குறைக்கப்படட ஜிஎஸ்டி வரி விதிப்பு
நாட்டின் 79வது சுதந்திர தின விழாவின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi), ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வர உள்ளதாகவும், அது சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெறும் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ITR Filing : வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




பால் பொருட்களின் விலையை குறைத்த அமுல்
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், அமுல் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
- ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.40 குறைக்கப்பட்டு ரூ.610 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சீஸ் ஒரு கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்பட்டு ரூ.545 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 200 கிராம் உறைந்த பனீர் ரூ.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 100 கிராம் வெண்ணெய் ரூ.58 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி ஏடிஎம் தேவையில்லை… ஈஸியா பணம் எடுக்கலாம் – எப்படி தெரியுமா?
மேலும் யூஎச்டி பால், ஐஸ்கிரீம், சாக்லெட், அமுல் புரோட்டின் உள்ளிட்ட பொருட்களின் விலையும் குறைக்கப்பட உள்ளது. பால், நெய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 700 பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அமுல் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.