வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?.. உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு.. என்னனு தெரிஞ்சிக்கோங்க!
Income Tax Filing for 2024 - 2025 | 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 16, 2025 கடைசி தேதியாக இருந்தது. இது நேற்றுடன் முடைவைத்துவிட்ட நிலையில், வருமான வரி செலுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது.

2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing 2024 – 2025) செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16, 2025 உடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், இதுவரையும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. வரி செலுத்தும் நபர்கள் டிசம்பர் 31, 2025 வரை வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் வரை கால அவகாசம் உள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 17, 2025) முதல் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் தாமதமாக வருமான வரி செலுத்துவதற்கான கட்டணத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
2024 – 2025 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல்
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒவ்வொருவரின் வருமானத்தை பொருத்து வருமான வரி மாறுபடும். அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான நபர்கள் வரி செலுத்தாத நிலையில், செப்டம்பர் 15, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் ஒரு நாள் அதாவது செப்டம்பர் 16, 2025 வரை கால வகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது.
இதையும் படிங்க : UPI : இனி ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.. வந்தது அதிரடி மாற்றங்கள்!




கடைசி தேதிக்கு பிறகு வருமான வரி செலுத்தினால் என்ன ஆகும்?
கடைசி தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். 234F விதியின்படி, ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமான ஈட்டும் நபர்களுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே ரூ.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர விதிகள் 234A, 234B மற்றும் 234C ஆகியவற்றின் கீழ் வட்டியும் விதிக்கப்படும். எந்த வித சிக்கல்களையும் எதிர்க்கொள்ளாமல் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் செலுத்துவது சிறப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : போன் எண்ணை சரிபார்க்கும் யுபிஐ மற்றும் வங்கிகள் – காரணம் என்ன தெரியுமா?
இருப்பினும் கூடுதல் கட்டணங்களுடன் டிசம்பர் 31, 2025 வரை வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரித்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.