ITR Filing : வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Income Tax Filing | 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 16, 2025 உடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.

2024 – 2025 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing 2024- 2025) செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16 உடன் முடிவடைந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ள நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்தும், மீண்டும் வருமான வரி தாக்கல் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வருமான வரி தாக்கல் காலக்கெடு
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதன்படி 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2025 அன்று கடைசி தேதியாக வருமான வரித்துறை அறிவித்தது. ஆனால், பெரும்பாலானவர்கள் வரி செலுத்தாத நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 15, 2025 வரை வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, வரி செலுத்தும் நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் மேலும் ஒரு நாள் காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில், செப்டம்பர் 16, 2025 வரை காலக்கெடுவை நீட்டித்து அறிவித்தது.
இதையும் படிங்க : ITR Filing : இன்று ஒருநாள் மட்டும் தான்.. வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!




கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
வருமான வரி விதிகளின் படி வருமான வரியை தவற விட்ட நபர்கள் மதிப்பீடு ஆண்டு முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்குள்ளாக வருமான வரியை தாக்கல் செய்யலாம். அதாவது 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை டிசம்பர் 31, 2025 வரை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் வரை காலக்கெடு இருப்பின் ஏன் செப்டம்பர் மாதம் கடைசி தேதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். செப்டம்பர் 16, 2025-க்கு பிறகு வருமான வரி செலுத்தும் நபர்கள் வருமான வரியுடன் சேர்த்து அபராத கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : போன் எண்ணை சரிபார்க்கும் யுபிஐ மற்றும் வங்கிகள் – காரணம் என்ன தெரியுமா?
எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்?
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்கள் ரூ.1,000 அபராதமாக செலுத்த வேண்டும். இதுவே ரூ. 5 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும். அபரதாதத்துடனும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று அது குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். அதுமட்டுமன்றி வருமான வரித்துறை சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.