என்னை கொன்றால் ஈரானில் மிகப்பெரிய அளவில் குண்டுவீச்சு நடக்கும்.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.. ஈரான் கொடுத்த பதிலடி என்ன ?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரான் என்னைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால், இதுவரை இல்லாத அளவுக்கு ஈரானை மிகப் பெரிய அளவில் குண்டுவீசுமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்" என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11, 2026: அமெரிக்கா ஏதேனும் ஒப்பந்தத்தை மீறினால் அதற்கு தக்க பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த சில நாட்களிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறினால் அதற்கு ஈரான் உரிய பதிலடி கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை:
மேலும், பேச்சுவார்த்தையைத் தொடருமாறு அமெரிக்காவிடம் ஈரான் கோரிக்கை வைத்ததாக டிரம்ப் கூறியதை மறுத்துள்ள அந்த அமைச்சகம், “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாங்கள் கோரவில்லை. கத்தார் நடுவர் குழு ஈரானுக்கு வந்ததை மட்டுமே ஏற்றுக்கொண்டோம்” என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், மூத்த பேச்சுவார்த்தை நடத்துபவருமான முகம்மது பாகர் காலிபாஃப், “அமெரிக்காவுடனான மோதல் ஈரானின் சரணடைவால் முடிவுக்கு வராது. உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினாலும், அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் தற்காப்புக்காக முழுமையாக தயாராக உள்ளோம். ஈரான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க உறுதியாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், “அமெரிக்காவை நாங்கள் நம்பவில்லை என்பதை தெளிவாக தெரிவித்தேன். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்களாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை அமைதிக்கானது அல்ல:
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயத்துல்லா ருஹொல்லா கோமேனியின் பேரனான அலி கோமேனியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை அமைதிக்கானது அல்ல. அமெரிக்காவுடன் சமாதானம் செய்வது துரோகமாகும். பேச்சுவார்த்தையும் போரின் ஒரு வடிவமே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்கா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும் மத்திய கிழக்கில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் உச்சத் தலைவர் அலி காமெனியின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது தாக்குதல்கள் தற்காலிகமாக குறைந்திருந்த நிலையில், அதன் மறுநாளே ஈரானில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டன. எனினும், அதில் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என்று வாஷிங்டன் மறுத்துள்ளது. அதேசமயம், கத்தார் நடுவர் குழு மீண்டும் ஈரானில் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னை கொன்றால்.. மிகப்பெரிய அளவில் குண்டுவீச்சு நடக்கும் – அதிபர் டிரம்ப்:
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் என்னைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால், இதுவரை இல்லாத அளவுக்கு ஈரானை மிகப் பெரிய அளவில் குண்டுவீசுமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்” என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் நீண்ட காலமாகவே ஈரானின் குறிவைப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறேன். அது புதிய விஷயம் அல்ல. இதுவரை அதிர்ஷ்டம் எனக்கு துணை நின்றுள்ளது. ஆனால் அது எப்போதும் தொடரும் என்று சொல்ல முடியாது” என்றும் அவர் கூறினார்.
மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்த போர் பதற்றம்:
நேட்டோ மாநாட்டில் பேசிய டிரம்ப், “ஈரானின் பல தலைவர்கள் அகற்றப்பட்டுள்ளனர். நானும் அவர்களின் முதன்மை இலக்காக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். மேலும், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகளை கடுமையாக விமர்சித்த அவர், “அவர்களுடன் செலவிட்ட நேரம் வீணானது. அவர்கள் பேசலாம்; அதனால் எந்தப் பயனும் இருக்காது” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்கின் பாதுகாப்பு சூழல் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.