ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு தெரிவித்த புதின்?.. வெளியான முக்கிய தகவல்!
Putin Invites Zelenskyy for Direct Talks | உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜெலன்ஸ்கி உடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு புதின் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெலன்ஸ்கி மற்றும் புதின்
ரஷ்யா, ஆகஸ்ட் 20 : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் (Ukraine President Zelenskyy) ரஷ்யாவில் நேரடி சந்திப்பு நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிபர்களுடன் பேச்சுவார்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), ரஷ்யா – உக்ரைன் அதிபர்களுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர போராடும் டிரம்ப்
உக்ரைன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஆகஸ்ட் 15, 2025 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18, 2025 அன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரு நாட்டு தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ரஷ்யா – உக்ரைன் அதிபர்களுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இதையும் படிங்க : உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!
ஜெலன்ஸ்கியை நேரடி பேச்சுவார்த்தை அழைத்த புதின்?
டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய புதின், அந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ரஷ்யா – உக்ரைன் பிரநிதிகள் உடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் செய்தி ஊடகமான டாஸ், செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : மிக கடுமையான விளைவுகள் ஏற்படும்.. ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு நேரடி பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது குறித்து உலக அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.