கார் கண்ணாடியில் நீர் படிவதற்கான காரணம் என்ன? சுத்தம் செய்வது எப்படி?
Clear Foggy Windshields Fast : கோடைக்காலத்தில் காரின் கண்ணாடியில் நீர் படிவது ஒரு பொதுவான பிரச்சனை. இது வெப்பநிலை வேறுபாடு மற்றும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இந்த நிலை வாகனம் ஓட்டும்போது சிக்கலை ஏற்படுத்துவதுடன், விபத்துகள் ஏற்படுவதற்கும் காரணமாகலாம். இதற்கான காரணங்கள் மற்றும் இதனை எளிதாகத் தீர்க்கக்கூடிய வழிகள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

காரில்(Car) ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளை கூட எளிதில் கையாளலாம். அதற்கான தீர்வுகள் கார் தயாரிப்பு நிறுவனங்களால் நமக்கு வழங்கப்படும். ஆனால் காலநிலை மாற்றத்தால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரும்பாலானோருக்கு புரிதல் இல்லை. அதன் ஒரு பகுதியாக கோடைகாலத்தில் (Summer) காரின் கண்ணாடியில் நீர் படிவது பொது பிரச்னையாக இருக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் விபத்துகள் கூட ஏற்படலாம். இது ஏன் நடக்கிறது, அதை சுத்தம் செய்வதற்கான எளிய வழி என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக அறியலாம்.
கோடையில் காரின் கண்ணாடியில் நீர்படிவதன் காரணம் என்ன?
- கோடையில் காருக்குள் ஏசி இயங்கும் போது, காருக்குள் வெப்பநிலை வெளிப்புறத்தை விட மிகக் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் திடீரென காரின் கதவைத் திறந்தாலோ அல்லது வெளியில் இருந்து சூடான காற்று உள்ளே வந்தாலோ, கண்ணாடியில் ஈரப்பதம் உறைந்து, நீர் படிகிறது.
- கோடைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இந்த ஈரப்பதம் குளிர்ந்த கண்ணாடியில் படும்போது, அது மேற்பரப்பில் ஒடுங்கி நீராவி போல் தெரிகிறது.
- கார் கண்ணாடியில் படியும் நீரை அகற்றி கண்ணாடியை சுத்தம் செய்வதற்கான எளிய வழிகள்
- ஏசியை ‘Face’ முறையில் இயக்காமல், ‘Defogger’ அல்லது ‘Windshield’ முறையில் அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் காற்று கண்ணாடியில் நேரடியாக விழுந்து மஞ்சத்தை நீக்கும்.
- வெளிக்காற்று காருக்குள் வரச் செய்யுங்கள். உங்கள் காரில் ஏசி வெளிக்காற்று உள்ளே நுழைந்தால் அது காரின் வெப்ப நிலை சமநிலையில் இருக்கும். இதனால் வெளியிலிருந்து காற்று உள்ளே வந்து கண்ணாடியில் நீர் படிவது தடுக்கப்படும்.
- விண்ட்ஷீல்டை துடைக்கவும். உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியை கையில் வைத்திருங்கள், தேவைப்படும்போது கண்ணாடியை விரைவாக சுத்தம் செய்யுங்கள். ஈரமான துணியால் ஒருபோதும் துடைக்காதீர்கள். அப்படி செய்தால் கண்ணாடியின் ஈரம் வெகு நேரம் படிந்து பயணத்தை கடுமையாக்கும்.
- பல கரா்களில் தற்போது டீஃபாகர் (DeFoogger) அமைப்புடன் வருகின்றன. அதை ஆன் செய்யும்போது கண்ணாடியை சுத்தம் செய்து நீர் படிவதை தடுக்கும்.
- கண்ணாடி மீது நீர் படிவதைத் தடுக்கும் வகையில் ஆன்டி-ஃபாக் ஸ்ப்ரே (Anti fog spray) பயன்படுத்தலாம். இது கடைகளில் கிடைக்கும். ஸ்ப்ரேயை கண்ணாடியில் தெளித்து, சிறிது நேரம் உலர விடுங்கள். இதனால் கண்ணாடியில் நீராவி படும் வாய்ப்பு குறையும். உங்கள் பயணமும் எளிதாகும்.
கோடைக்காலங்களில் கார் கண்ணாடியில் நீர் படிவது இயல்பானதுதான். ஆனால் அதனை சரியாகப் புரிந்து, சில எளிய முயற்சிகளை மேற்கொண்டால், நீங்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணிக்கலாம். குறிப்பாக காரின் ஏசி பயன்பாட்டை சரி செய்வது, டீஃபாகர் பயன்பாடு, மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது, ஆன்டி-ஃபாக் ஸ்ப்ரே போன்றவை உங்கள் பயணம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளும்.