Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாட்ஜிபிடியின் அறிவுரையைக் கேட்ட நபருக்கு ஏற்பட்ட சோகம் – மருத்துவமனையில் அனுமதி

AI Diet Gone Wrong : அமெரிக்காவில் ஒருவர் சாட்ஜிபிடியின் அறிவுரையைக் கேட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் சாட்ஜிபிடியிடம் உணவில் உப்பை தவிர்ப்பது எப்படி கேட்டிருக்கிறார். அதற்கு சாட்ஜிபிடி வழங்கிய அறிவுரையைக் கேட்டு நடந்ததன் காரணமாக அவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

சாட்ஜிபிடியின் அறிவுரையைக் கேட்ட நபருக்கு ஏற்பட்ட சோகம் – மருத்துவமனையில் அனுமதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Aug 2025 22:34 PM

சாட்ஜிபிடியின் (Chatgpt) அறிவுரையைக் கேட்டு உப்புக்குப் பதிலாக சோடியம் புரோமைடைப் (Sodium Bromide) பயன்படுத்திய ஒருவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  அவரின் கதை ஏஐ டூல்களை கண்மூடித்தனமாக நம்புவது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அமெரிக்காவை (America) சேர்ந்த ஒருவர் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவருக்கு உடல் ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. இந்த நிலையில் ஒருநாள் அவர் மயங்கி விழுந்திருக்கிறார். முதலில் அவருக்கு யாரோ விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் தான் மருத்துவர்களுக்கு உண்மை புரிந்திருக்கிறது.

மருத்துவர்கள் அவரிடம் உணவுப்  பழக்கம் குறித்து விவரமாக கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர், தான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும், தண்ணீரை வீட்டிலேயே சுத்திகரித்து குடித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் உப்புக்கு பதிலாக 3 மாதங்களாக சோடியம் புரோமைடை பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்போது தான் மருத்துவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இதையும் படிக்க : ஜிபிடி-5 மாடலை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ – அப்படி என்ன ஸ்பெஷல்?

சாட்ஜிபிடியின் அறிவுரையைக் கேட்டவருக்கு நேர்ந்த கதி

அவர் உணவில் உப்பை எப்படி குறைப்பது என சாட்ஜிபிடியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு உப்புக்கு மாற்றாக, அதாவது சோடியம் குளோரைடுக்கு பதிலாத சோடியம் புரோமைடு பயன்படுத்துமாறு பரிந்துரைத்திருக்கிறது. இதனையடுத்து அவர் ஆன்லைனில் சோடியம் புரோமைடை வாங்கி பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்.

புரோமிசம் என்றால் என்ன?

புரோமிசம் என்பது உடலில் அதிகப்படியான புரோமைடு சேரும்போது ஏற்படும் ஒரு ஆபத்தான நிலை. இது மூளை, மன ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்தப் பிரச்னை ஏற்படும் ஒருவருக்கு இல்லாதது இருப்பது போல மாயத்தோற்றம் ஏற்படும். குறிப்பாக தேவையில்லாத சந்தேகங்கள், முகப்பரு, நடப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஒரு காலத்தில் புரோமைடு சில மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அதன் ஆபத்துகள் குறித்து தெரிய வந்த பிறகு,  1989க்கு பிறகு அமெரிக்காவில் சாப்பிடக் கூடிய பொருட்களில் இது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், புரோமைடு கொண்ட பொருட்கள் ஆன்லைனில் எளிதாகக் கிடைப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படத் துவங்கியிருக்கிறது.

இதையும் படிக்க : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அந்த நபருக்கு கடுமையான சந்தேகங்கள் மற்றும் பிரமைகள் ஏற்பட்டன. கூடுதலாக, அவருக்கு தூக்கமின்மை மற்றும் சோர்வு போன்ற பிரச்னைகள் இருந்தன, அதே போல் அவரது முகத்தில் முகப்பரு, சரியாக நடக்க இயலாமை மற்றும் தீவிர தாகம் போன்ற அறிகுறிகளும் இருந்தன. அவரது இரத்தத்தில் புரோமைடு அளவு 1,700 மி.கி/லி என்று சோதனைகள் காட்டுகின்றன. இது சாதாரண அளவை விட மிக அதிகம். இந்த அளவைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு புரோமைசம் இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது?

மருத்துவர்கள் உடனடியாக புரோமைடு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அவரது உடலில் இருந்து புரோமைடை அகற்ற உப்புநீரைக் கொடுத்தனர். மூன்று வாரங்களுக்குள், அவரது மனநிலை மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டது. அதன் பிறகு, மருந்து நிறுத்தப்பட்டு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார்.