Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

18 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு ஏஐ உதவியால் கர்ப்பமான பெண் – எப்படி சாத்தியமானது?

AI Makes Parenthood Possible : 18 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பம் தரித்த நிகழ்வு உலக அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. STAR என்ற ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்நிகழ்வு சாத்தியமாகியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

18 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு ஏஐ உதவியால் கர்ப்பமான பெண் – எப்படி சாத்தியமானது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 04 Jul 2025 22:25 PM

குழந்தை பெற 18 ஆண்டுகள் முயற்சி செய்த ஒரு தம்பதி,  செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பம் தரித்துள்ளார்கள். இது உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய முறைகள் பலவற்றை முயற்சி செய்த இந்த தம்பதி, அதில் எதிலும் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள கருத்தரித்தல் மையத்தை (Fertility Center) நாடினர். இந்த தம்பதியருக்கு பல ஐவிஎஃப் (IVF) எனப்படும் விட்ரோ கருத்தரித்தல் (In Vitro Fertilisation) சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், கணவருக்கு ‘Azoospermia’ எனும் ஒரு அபூர்வ நிலை இருப்பதால் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்த நிலையில், STAR (Sperm Tracking and Recovery) எனப்படும் புதிய ஏஐ முறை அவர்களுக்கு உதவியாக அமைந்தது.

STAR முறை எப்படி செயல்படும்?

STAR என்பது டாக்டர் ஜிவ் வில்லியம்ஸ் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ அடிப்படையிலான முறை. மனிதர்களால் காணப்படாத நுண்ணிய விந்தணுக்களை, ஏஐ அல்காரிதம்களின் உதவியுடன் கண்டறிந்து சேகரிக்கும் திறமை இந்த முறைக்கு உண்டு.

ஒரு நுண்ணியல் கிராஃபில் விந்தணு மாதிரி வைக்கப்பட்டபின், ஏஐ தொழில்நுட்பம் கொண்ட STAR சிஸ்டம், ஒரு மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை ஸ்கேன் செய்கிறது.  கொடுக்கப்பட்ட மாதிரியில் இருக்கும் செயல்படக்கூடிய விந்தணுக்களை கண்டறிந்து காட்டுகிறது. குறிப்பாக மிகவும் அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இரண்டு நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத விந்தணுக்களை, ஏஐ ஒரு மணி நேரத்தில் 44 சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கும் என கூறப்படுகிறது.

STAR முறையில் கர்ப்பமான முதல் பெண்

இதே STAR முறையின் உதவியுடன் இந்த தம்பதியர் கர்ப்பம் அடைந்ததை அறிந்ததும் அந்த மனைவி கூறியதாவது:
“நான் உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறேனா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு காலையிலும் எழுந்திருக்கும் போதும் இது ஒரு கனவா என்று நினைக்கிறேன். ஸ்கேன் பார்க்கும் வரை என்னால் நம்ப முடியவில்லை என உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.  இது உலகிலேயே STAR முறையின் மூலம் கர்ப்பம் அடையும் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத்தில் ஒரு புதிய புரட்சி ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பெற முடியாமல் மனவேதனை அனுபவிக்கும் தம்பதியருக்காக இது ஒரு பெரும் நம்பிக்கையை இந்த முறை அளித்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற தொழில்நுட்பங்கள் இன்னும் பலருக்கு வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இந்தியர்களுக்கும் விரைவில் இந்த தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.