வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. இந்திய அரசு எச்சரிக்கை!

Pakistan Intel Using WhatsApp for Spying Indians | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை வாட்ஸ்அப் மூலம் உளவு பார்ப்பதாக இந்திய அரசு எச்சரித்துள்ளது. இந்திய குடிமக்களை இத்தகைய வலையில் விழாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. இந்திய அரசு எச்சரிக்கை!

மாதிரி புகைப்படம்

Published: 

15 May 2025 18:58 PM

இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) விவகாரத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் உளவு பார்ப்பதாக மத்திய அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தங்களை இந்திய ராணுவத்தினர் போல சித்தரித்துக்கொண்டு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்த தகவல்களை பெற முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க  அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் வாட்ஸ்அப் உளவு குறித்து மத்திய அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பாகிஸ்தானை கோபப்படுத்திய நிலையில், அது இந்தியாவின் சில பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிய நிலையில், மே 10, 2025 அன்று ஒரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன.

இதன் காரணமாக அன்றைய தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல் நடத்த மாட்டோம் என இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால், அன்றைய தினமே ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்தது. இதன் காரணமாக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான் – இந்தியா எச்சரிக்கை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை வாட்ஸ்அப் மூலம் உளவு பார்ப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது. தங்களை இந்திய ராணுவத்தினர் போல காட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாட்டின் நிலை குறித்தும் கேட்பர். எனவே, 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளில் இருந்து மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இந்திய பத்திரிக்கையாளர்களை தொடர்ப்புக்கொண்டு ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை சேகரிக்க முயன்று வருகின்றனர். எனவே இத்தகைய முயற்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.