‘ஹேப்பி நியூ இயர்’ மெசேஜ் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் – எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்
New Year Scam Alert: புத்தாண்டு வாழ்த்துகள் மூலம் காத்திருக்கும் ஆபத்து குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஹேப்பி நியூ இயர் என அனுப்பப்படும் சில மெசேஜ்களை கிளிக் செய்தால் அதன் மூலம் நம் வங்கிக் கணக்கு நொடியில் காலியாகலாம் என எச்சரித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துக்கு பின்னால் இருக்கும் ஆபத்து
புத்தாண்டு (New Year) கொண்டாட்ட காலத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் புதிய மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘ஹாப்பி நியூ இயர்’ வாழ்த்து என்ற பெயரில் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் அனுப்பப்படும் சில மெசேஜ்கள், உங்கள் வங்கி கணக்கையே காலி செய்யும் அளவுக்கு ஆபத்தானவை என சைபர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி பொதுவாக ஒரு சாதாரண புத்தாண்டு வாழ்த்து மெசேஜ் மூலம் தொடங்குகிறது. அந்த மெசேஜில், ஒரு சிறப்பு வாழ்த்து அட்டை அல்லது படம் இருப்பதாக கூறி, ஒரு டாக்குமென்ட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்கப்படுகிறது. அந்த ஃபைல்பெரும்பாலும் ஏபிகே ஃபைலாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து நிறுவியவுடன், உங்கள் மொபைல் போனில் ஆபத்து தொடங்குகிறது.
ஹேப்பி நியூ இயர் மெசேஜால் காத்திருக்கும் ஆபத்து
இந்த ஏபிகே ஃபைலை நிறுவிய சில மணி நேரங்களுக்குள், மொபைல் போன் தானாகவே செயல்படுவது, செயலிகள் தானாக திறப்பது, காண்டாக்ட்ஸை அனுமதி இல்லாமல் அணுகுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். சில சம்பவங்களில், வங்கி கணக்குகள் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் அனுமதி இல்லாத பண பரிவர்த்தனைகளும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, இந்த ஏபிகே ஃபைல்கள் பின்னணியில் அமைதியாக இயங்கி, மோசடி நபர்களுக்கு உங்கள் போனின் முழுக் கட்டுப்பாட்டையும் வழங்குகின்றன. பண்டிகை காலங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய மோசடிகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறையின் சைபர் பிரிவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக போலி ஏபிகே ஃபைல்கள் மற்றும் லிங்க் அனுப்பப்பட்டு, பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏபிகே ஃபைலால் காத்திருக்கும் ஆபத்து
ஏபிகே என்பது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் செயலிகளை நிறுவ பயன்படும் ஃபைலாகும். பொதுவாக செயலிகள் பாதுகாப்பான முறையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், தெரியாத நபர்கள் அனுப்பும் ஏபிகே ஃபைல்களை நிறுவுவது மிகவும் ஆபத்தானது. அவை உங்களை உளவு பார்க்கவும், தகவல்களை திருடவும், வங்கி கணக்கை காலி செய்யவும் பயன்படலாம்.
இதையும் படிக்க : புகைப்படங்கள், வீடியோக்கள் ஏஐ ஆ?.. கூகுள் ஜெமினி மூலம் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!
சைபர் மோசடி மெசேஜ்களை அடையாளம் காண சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அவசரம் காட்டும் செய்திகள், பரிசு அல்லது வெகுமதி கிடைக்கும் என கூறுவது, தெரியாத எண்ணிலிருந்து வரும் மெசேஜ்கள், எழுத்துப் பிழைகள், சந்தேகமான இணைப்புகள், ஓடிபி அல்லது வங்கி விவரங்களை கேட்பது ஆகியவை முக்கிய எச்சரிக்கை அடையாளங்கள். உண்மையான நிறுவனங்கள் இவ்வாறு தகவல்களை மெசேஜ் மூலம் கேட்காது.
தொழில்நுட்பம் வளர வளர, இணைய மோசடிகளும் வளர்ந்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதும், சந்தேகமான மெசேஜ்களை ஓபன் பண்ணாமல் தவிர்ப்பதும் மிகவும் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.