குழந்தை திருமணம்.. ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது!

தருமபுரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் காதல் திருமணத்தில், லஞ்சம் பெற முயன்ற பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த இந்த நடவடிக்கை ஆதாரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை திருமணம்.. ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது!

கைதான வீரம்மாள்

Updated On: 

24 Sep 2025 06:27 AM

 IST

தருமபுரி, செப்டம்பர் 24: தருமபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு நடந்த குழந்தை திருமண விவகாரத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க பெண் மற்றும் ஆணிற்கு திருமண வயது வரம்பு என்பது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆங்காங்கே வெளிப்படையாகவும், ரகசியமாகவும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. அப்படியான ஒரு சம்பவத்தில் தான் பெண் காவல் ஆய்வாளர் வசமாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறுமி காதல் திருமணம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் கன்டிகானஹள்ளி என்ற கிராமம் உள்ளது.  இந்த பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இவரது இரண்டாவது மகளான 16 வயது சிறுமி  கடந்த 2025 மார்ச் 26 ஆம் தேதி ஒருவரை காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதையும் படிங்க:  ஆதாரில் மோசடி.. இறந்த கருவுடன் வாழும் 16 வயது சிறுமி – நடந்தது என்ன?

இவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். அப்போது மாணவியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் மாணவி மைனர் பெண் என்பது கண்டறியப்பட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்

அதன் பெயரில் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினரை அழைத்து விசாரணை செய்தார். அப்போது 18 வயதுக்கு முன்பே சிறுமிக்கு திருமணம் செய்தது தவறு என வீரம்மாள் தெரிவித்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்தால் பெற்றோரை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டி வரும்.

இதையும் படிங்க:  அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை

எனவே கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.50,000 லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர விரும்பாத பெண்ணின் தாயார் இது குறித்து தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் நாகராஜிடம் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை சிறுமியின் தயாரிடம் கொடுத்து காவல் ஆய்வாளர் வீரம்மாளிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். நேற்று (செப்டம்பர் 23) பிற்பகல் காவல் ஆய்வாளர் வீரம்மாளை சந்தித்த அந்தப் பெண் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.  வீரம்மாள் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.