ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்.. காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கைது!
Krishnagiri Crime News: ஓசூர் தனியார் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பக இயக்குநர் சாம் கணேஷ் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, செப்டம்பர் 23: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் 4ஆம் வகுப்பு சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ளார். இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, காப்பக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றத்தைப் புகாரளிக்கத் தவறியதற்காக ஒரு ஆசிரியர் மற்றும் அவரின் மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியை சேர்ந்த சாம் கணேஷ் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். அதன் வளாகத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண் என 33 குழந்தைகள் தங்கியுள்ளனர்.
சாம் கணேஷூக்கு உதவியாக அவரின் மனைவியான ஜோஸ்பின் ஆசிரியையாகவும்ம் பணிபுரிந்து வருகிறார். இப்படியான நிலையில் இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, அங்கு தங்கியிருந்த 9 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜோஸ்பின் குழந்தையின் தாயாரை செல்போனில் அழைத்து மாணவிக்கு உடல்நலப் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை.. குற்றவாளி என்கவுண்டர்!




இதனைத் தொடர்ந்து அன்று மாலையில், குழந்தையை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் 3 நாட்கள் கழித்து செப்டம்பர் 12 ஆம் தேதி, குழந்தை ஓசூரில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தை மருத்துவர்களிடம் காப்பக்கத்தில் இருப்பவர்கள் தன்னை தகாத முறையில் தொட்டதாக கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாம் கணேஷ் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. உடனடியாக குழந்தையின் தாயும், அவரது நண்பரும் குழந்தைகள் இல்லத்திற்கு நேரில் சென்று நிர்வாகத்திடம் இந்த பிரச்சினை குறித்து நியாயம் கேட்கச் சென்றனர். ஆனால் அங்கு சாம் கணேஷ், ஜோஸ்பின், ஒரு பெண் ஆசிரியர், அவரது 2 நண்பர்கள் என 5 பேர் இந்த பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் இதில் அனைவருக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகித்த சிறுமியின் தாய் நேராக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையும் படிங்க: எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்..
இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலின் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய ஊழியர்கள், சட்ட மற்றும் நன்னடத்தை அதிகாரி ஜே. ரகுராமன் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர், அதன் பிறகு, ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சாம் கணேஷ், ஜோஸ்பின், நாதா முரளி, இந்திரா , செல்வராஜ் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த குழந்தைகள் காப்பகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்ததாகவும், அதன் உரிமம் கடந்த ஏப்ரல் மாதத்தில் காலாவதியாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, காப்பகம் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சட்டப்பூர்வ செயல்முறைகள் மூலம் மீண்டும் பெறப்பட்டதும் தெரிய வந்தது.