சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் தவெக?.. கூட்டணி நிலவரம் எப்படி உள்ளது?
திமுக கூட்டணியை பார்த்தால், காங்கிரஸ் கட்சி மற்றும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியில்லாத மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில், அக்கட்சி உறுப்பினர்கள் பலரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அக்கட்சி தரப்பில் இன்னும் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது

தனித்து போட்டியிடும் தவெக?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை தக்க வைக்க போராடி வருகிறது. அந்தவகையில், அதிமுக கிட்டதட்ட தனது கூட்டணியை இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது. இந்த தேர்தலில் புதிதாக விஜய்யின் தவெக இணைந்துள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும் நடிகராக இருந்து வந்த அவர் அரசியலுக்கு வருவதால், அவரது மக்கள் செல்வாக்கு தேர்தலில் வாக்குகளாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில், தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மேலும் படிக்க: ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..
அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்:
தமிழகத்தில் முதல் ஆளாக 6 மாதங்களுக்கு முன்பே அதிமுகவும், பாஜகவும் தங்களது கூட்டணியை உறுதி செய்தன. அந்தவகையில், மேலும் சில கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அவர்கள் தீவிரமாக முயன்று வந்தனர். அந்தவகையில், அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. தொடர்ந்து, ஆரம்பம் முதலே தவெகவை தங்களது கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் அதிமுகவும், பாஜகவும் முயன்று வந்தன. ஆனால், விஜய் அதற்கு பிடிகொடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில், எஞ்சிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். அந்த வகையில், தற்போது டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமகவும் இணைய வாய்ப்பு:
அவரைத் தொடர்ந்து, தேமுதிகவும், ராமதாஸ் தரப்பு பாமகவும் அவர்கள் கூட்டணியில் இணையும் எனத் தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தையை பியூஷ்கோயல் இன்று முன்னெடுக்க உள்ளதாக தெரிகிறது. இதையொட்டி, 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள அவர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை இறுதி செய்ய உள்ளார். குறப்பாக அதிமுகவுடனான தங்களது தொகுதி பங்கீட்டையும் அவர் நிறைவு செய்ய உள்ளார். அதிமுகவிடம் இருந்து தாங்கள் பெறும் தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதிகளை அவர்கள் டிடிவி தினகரனின் அமமுகவிற்கு பிரித்து வழங்க உள்ளதாக தெரிகிறது.
இறுதி கட்டத்தை எட்டிய NDA கூட்டணி:
அதன்படி, அதிமுக – பாஜக கூட்டணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி, தற்போது அவர்களது கூட்டணியில், பாஜக, அதிமுக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதைத்தவிர்த்து, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளும், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமகவும் அவர்களுடன் இணைய உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் சுமுகம் அடைந்த பின், ஜன.23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் குளறுபடி:
அதேசமயம், திமுக கூட்டணியை பார்த்தால், காங்கிரஸ் கட்சி மற்றும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியில்லாத மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில், அக்கட்சி உறுப்பினர்கள் பலரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அக்கட்சி தரப்பில் இன்னும் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் மீண்டும் திமுகவுடன் இணைவார்களா? அல்லது தவெகவுடன் இணைவர்களா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலே தொடர உள்ளன.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
தவெகவுடன் யார் தான் கூட்டணி?
அப்படி பார்த்தால், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை என்ற நிலையே உள்ளது. தற்போது தவெகவின் ஒரே இறுதி நம்பிக்கை காங்கிரஸ் மட்டுமே. அவர்களும் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், தவெகவுடன் வேறு எந்த கட்சியும் கூட்டணி அமைக்க எஞ்சியில்லை. இதன் மூலம் முதல் தேர்தலிலேயே அக்கட்சி தனித்து போட்டியிடும். குறிப்பாக, தனித்து போட்டியிடுவதன் மூலம் தங்களது பலத்தையும் அறியலாம். பொது கூட்டங்களில் திரளும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பதையும் அறிய முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.